நெஹ்ராவுக்கு கிடைத்த வாய்ப்பு இர்பான் பதான்னுக்கு கிடைக்குமா
கடந்த ஆண்டு இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது ஒருநாள் மற்றும் டி20 தொடரை இந்தியா இழந்தது. இதனால் டி20 தொடருக்கான அணியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரருக்கான இந்திய அணியில் 36 வயதான ஆசிஷ் நெஹ்ரா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்ற மூத்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால் தனக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று இர்பான் பதான் நம்பிக்கையில் உள்ளார். தற்போது நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் 14 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை படைத்தார். அத்துடன் 154 ரன்களும் சேர்த்தார். இந்நிலையில், பதானிடம் பேட்டி கண்ட ஆங்கில பத்திரிகை ஒன்று, ‘ஆசிஷ் நெஹ்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?’ என கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் அளித்த பதான் ‘‘என்னுடைய வேலை கிரிக்கெட் விளையாடுவதும், அதிக விக்கெட் வீழ்த்துவதும்தான். அதை சரியாக செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருக்கிறது. தற்போதைய என்னுடைய பந்து வீச்சால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய நம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ளேன். நான் என்னுடைய கடைசி போட்டியில் சஞ்சு சாம்சனை எல்.பி.டபிள்யூ. செய்திருந்தேன். என்னுடைய பந்து வீச்சு சிறப்பாக இருப்பதால் மட்டுமே அது நடந்துள்ளது. என்னுடைய கடினமான முயற்சி சிறப்பான ஆட்டம் மூலம் பிரதிபலிப்பதில் மகிழ்ச்சி. ஆனால், இன்னும் ஏராளமான வகையில் நான் வாய்ப்பை பெற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆசிஷ் நெஹ்ராவால் 36 வயதில் அணிக்கு திரும்ப முடியும் என்றால், எனக்கு 31 வயதுதான் ஆகிறது. அணிக்கு மீண்டும் திரும்புவது குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால், தாய்நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாகும். மூத்த வீரர்களுக்கு அணியில் இடம்கொடுப்பது நல்ல விஷயம். நம்மைப் போன்ற வீரர்கள் சிறந்த முறையில் விளையாடி, உடற்தகுதியுடன் இருந்தால் அணியில் இடம்பெறலாம் என்ற நம்பிக்கையானது உண்மையிலேயே நல்ல விஷயம். பதான் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக கடந்த 2012-ம் ஆண்டு டி20 போட்டியில் விளையாடினார். அதன்பின் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.