பல டென்னிஸ் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் அதிர்ச்சி தகவல்கள்
கிராண்ட் ஸ்லாம் உள்ளிட்ட பல டென்னிஸ் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றிருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவல்களை பி.சி.சி வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் நடத்திய விசாரணையிலே உலகின் பல முன்னணி டென்னிஸ் போட்டிகளில் பந்தய மோசடி நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தரவரிசையில் முதல் 50 இடங்களில் இருக்கும் வீரர்களில் 16 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. கவுரமிக்க விம்பிள்டன் போட்டியிலும் 3 ஆட்டங்களில் சூதாட்டம் நடைபெற்று இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 16 பேரில் அமெரிக்க ஓபன் சாம்பியன் மற்றும் விம்பிள்டன் இரட்டையைர் பிரிவு சாம்பியன் ஒருவரும் உள்ளதாக சொல்லப்படுகிறது. ரஷ்யா மற்றும் இத்தாலியில் தான் டென்னிசில் அதிக அளவு சூதாட்ட பணம் புழங்குகிறதாம். ஹொட்டல் அறையில் வீரர்களை சந்திக்கும் சூதாட்டக்காரர்கள் 50 ஆயிரம் டொலர்கள் வரை ஒரு போட்டிக்கு வழங்குகின்றனராம். கடந்த 2008ம் ஆண்டே பி.பி.சி 28 சர்வதேச வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக ஆடவர் டென்னிஸ் போட்டியை நடத்தி வரும் ஏ.டி.பி அமைப்பிடம் அறிக்கை சமர்பித்தது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் உலகின் ’நம்பர் ஒன்‘ வீரரான செர்பியாவின் நொவக் ஜொகோவிக் கடந்த 2007ம் ஆண்டே ’மேட்ச் பிக்சிங்’ செய்வதற்காக ஒருவர் தன்னை நாடியதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், சிலர் இதை சிறந்த வாய்ப்பாக கருதுவார். ஆனால் என்னை பொறுத்தவரை விளையாட்டு நேர்மைக்கு எதிரான குற்றம். இதற்கு நான் ஒரு போதும் ஆதரவு அளிக்க மாட்டேன். அந்த சூதாட்டக்காரர் என்னை சந்தித்து பேச விரும்பினார். ஆனால் நான் அவரை உடன் இருப்பவர்கள் மூலமே சமாளித்து அனுப்பி விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் விளையாட்டுத்துறை அதிகாரிகளோ, விம்பிள்டன் உட்பட பல டென்னிஸ் போட்டிகளில் பந்தய மோசடி நடைபெற்றுள்ளது எனக் கூறப்படும் ஆதாரங்களை தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.