மீண்டும் துப்பாக்கி ஹாரிஸ் ஜெயராஜ் நம்பிக்கை
தமிழ்த் திரையிசை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை ஹாரிஸ் ஜெயராஜ் ஏற்படுத்தி வைத்திருந்தார். ஆனால், கடந்த சில படங்களாக அவர் இசையமைக்கும் படங்களின் பாடல்கள் அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. அவரின் கடைசி மியூசிக்கல் ஹிட்டாக அமைந்த படம் துப்பாக்கி தான். 2012ல் வெளிவந்த துப்பாக்கி படத்திற்குப் பிறகு அவர் இசையமைத்த “இரண்டாம் உலகம், என்றென்றும் புன்னகை, இது கதிர்வேலன் காதல், யான், என்னை அறிந்தால், அனேகன், நண்பேன்டா” ஆகிய படங்கள் வரை மியூசிக்கல் ஹிட்டாக அமையவில்லை. ஒரு படத்தில் ஒரு பாடல் ஹிட் ஆனதுதான் அதிகமாக இருந்தது. அதிலும் கூட என்னை அறிந்தால், அனேகன்படங்களின் தலா ஒரு பாடல்தான் ஹிட்டானது.தன் படங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வரும் உதயநிதி ஸ்டாலினுக்குக் கூட ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்குப் பிறகு சமீபத்தில் வந்த கெத்து வரை ஹிட்டான பாடல்களைத் தராமல் விட்டுவிட்டார் ஹாரிஸ். இருந்தாலும் தற்போது ஹாரிஸ் கைவசம் எஸ் 3, இருமுகன் ஆகிய படங்கள் உள்ளன. இந்தப் படங்களோடு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து இயக்க உள்ள புதிய படத்திற்கான பாடல் பதிவு வேலைகளை ஹாரிஸ் ஆரம்பித்துவிட்டார். அது பற்றி “துப்பாக்கி படத்தின் அதே கிரியேட்டிவ் டீமுடன் என்னுடைய அடுத்த பயணத்தை ஆரம்பித்துவிட்டேன். அதே மேஜிக்கை மீண்டும் ஏற்படுத்துவோம் என்று நம்புகிறேன்,” என ஹாரிஸ் தெரிவித்துள்ளார்