ஆஸி.ஓபன் நடால் தோல்வியடைந்து வெளியேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றிலேயே ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார். ஸ்பெயினைச் சேர்ந்த மற்றொரு இடது கை வீரர் ஃபெர்னாண்டோ வெர்டாஸ்கோ, நடாலை 7-6, 4-6, 3-6, 7-6, 6-2 என்ற செட்களில் போராடி வென்று 2-வது சுற்றுக்கு அடியெடுத்து வைத்தார். ராட் லேவர் அரங்கில் இத்தகைய பவர் டென்னிஸை கண்டதில்லை என்றே டென்னிஸ் நிபுணர்கள் இந்தப் போட்டியைப் பற்றி கருத்து தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றில் நடால் வெளியேறுவது இதுவே முதல் முறை. கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் இது நடாலுக்கு 2-ம் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 4 மணி 41 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் வெர்டாஸ்கோ 90 வின்னர்களை அடித்தார். கடைசி 6 கேம்களை வென்று நடாலை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார். வெர்டாஸ்கோவுக்கு எதிராக நடால் 14-2 என்ற வெற்றி விகிதத்தை வைத்துள்ளார். ஆனால் இன்று குறிப்பாக 5-வது செட்டில் வெர்டாஸ்கோவுக்கு தொட்டதெல்லம் துலங்கியது என்றே கூற வேண்டும், ஏனெனில் 5-வது செட்டில் நடால் 2-0 என்று முன்னிலை வகித்தார், ஆனால் அதன் பிறகு வெர்டாஸ்கோவின் தொடர் வின்னர்களுக்கு முன்னால் நடால் ஒன்றும் செய்ய முடியாமல் திணறினார். மேலும் வெர்டாஸ்கோ 20 ஏஸ் சர்வ்களை அடித்தார். சர்வ்களை திருப்பி அடிப்பதில் 10 வின்னர்களையும், இருவரும் மாறி மாறி அடிக்கும் ரேலியில் 57 வின்னர்களையும் வெர்டாஸ்கோ பெற்றார். நடாலை 54 முறை தவறிழைக்கச் செய்தார் வெர்டாஸ்கோ. குறிப்பாக நடாலின் ஃபோர்ஹேண்டை குறிவைத்து சக்தி வாய்ந்த ஷாட்களை ஆடினார் வெர்டாஸ்கோ. இதில் ஃபோர்ஹேண்ட் ஷாட்களில் மட்டும் 37 தவறுகளை நடால் செய்ததாக ஆட்ட விவரம் கூறுகிறது. முதல் செட்டில் 6-6 என்று சமநிலை வகித்த போது நடால் தன் சர்வில் இரட்டைத் தவறுகளைச் செய்தார் இதனால் முதல்செட்டை டை பிரேக்கரில் கைப்பற்றினார் வெர்டாஸ்கோ. அடுத்த 2 செட்களில் நடால் எழுச்சியுற்றார். இதில் பல சுவாரசியமான ராலியில் நடால் அபாரமாக ஆடி எழுச்சியுற்றார். இதனால் நடால் தோற்க வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது. ஆனால் 4-வது செட் மீண்டும் டைபிரேக்கருக்குச் சென்ற போது தனது சக்தி வாய்ந்த ஃபோர்ஹேண்ட் ஷாட்களினால் நடாலை நிலைகுலையச் செய்து 7-4 என்ற சர்வ் கணக்கில் 4-வது செட்டை 7-6 என்று கைப்பற்றினார் வெர்டாஸ்கோ. 5-வது செட்டில் வெர்டாஸ்கோவின் சர்வை முறியடித்து 2-0 என்று முன்னிலை வகித்தார் நடால். ஆனால் அதன் பிறகு நடாலின் 2 சர்வ்களை பிரேக் செய்த வெர்டாஸ்கோ தன் சர்வை விட்டுக் கொடுக்காமல் நடாலை திணறச் செய்து அபார வெற்றி பெற்றார். 5-வது செட்டில் வெர்டாஸ்கோவின் ஆட்டம் வேறு ஒரு நிலைக்கு உயர்ந்தது.