சுரேஷ் ரெய்னாவை ஒருநாள் அணியிலிருந்து நீக்கியிருக்கக் கூடாது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னாவை நீக்கியதால் இந்தியாவுக்கு ஒரு பேட்ஸ்மென் குறைவாக உள்ளது என்று கருதுகிறார் விவிஎஸ்.லஷ்மண். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு லஷ்மண் இது குறித்து கூறியதாவது: ஒரு பேட்ஸ்மென் குறைவாக உள்ளது என்றே கருதுகிறேன். ரெய்னா நீக்கப்பட்டது தவறு. உலகக் கோப்பையில் அவர் நன்றாகவே ஆடினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடினமான தொடரை எதிர்கொண்டார் ரெய்னா. 6-ம் நிலையில் களமிறங்கி, புதிய களவியூக விதிமுறைகளின் கீழ் வெற்றிக்குத் தேவைப்படும் 8 அல்லது 10 ரன்களை எடுக்க நேரடியாக பெரிய ஷாட்களை ஆட முடியாது. பேட்டிங்குக்குக் களமிறங்கும் போது அழுத்தமான சூழ்நிலையே நிலவும். ஆனால் அதுவே நல்லதாகக் கூட அமைய வாய்ப்புள்ளது. ரெய்னா இந்திய அணியின் முக்கிய உறுப்பினர். டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணியில் ரெய்னாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டது நிச்சயம் அவரை காயப்படுத்தியிருக்கும், ஆனால் இதுவே மேலும் சிறபாக ஆடும் உந்துதலையும் அளிக்கலாம், என்றார்.