Matrimony OTT-Platforms Jobs Coupons Business

பைனலில் சென்னை–கோவா அணிகள்




கோல்கட்டா ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் பைனலுக்கு சென்னை அணி முதல் முறையாக முன்னேறியது. வரும் 20ல் நடக்கும் பைனலில் கோவா அணியை சந்திக்கிறது. கோல்கட்டா அணி வெளியேறியது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 2வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று கோல்கட்டாவில் நடந்த இரண்டாவது சுற்று அரையிறுதி போட்டியில் கோல்கட்டா, சென்னை அணிகள் மீண்டும் மோதின. முன்னதாக புனேயில் நடந்த முதல் சுற்று அரையிறுதியில் சென்னை அணி 3 0 என வென்றதால், இப்போட்டியை குறைந்தபட்சம் டிரா செய்தாலே பைனலுக்கு முன்னேறிவிடலாம் என்ற நிலையில் களமிறங்கியது. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் சென்னை அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பு வீணடிக்கப்பட்டது. இதேபோல 13வது நிமிடத்தில் சென்னையின் மெண்டோசா அடித்த பந்தை கோல்கட்டா கோல்கீப்பர் அம்ரிந்தர் சிங் சாந்து அருமையாக தடுத்தார். இந்நிலையில் 22வது நிமிடத்தில் சென்னையின் மெண்டி, பந்தை தலையால் முட்டி கோல்கீப்பர் எடெல்லிடம் அனுப்ப முயன்றார். அப்போது அருகில் இருந்த கோல்கட்டாவின் லெகிக், கோல்கீப்பரை ஏமாற்றி பந்தை லேசாக உதைத்து கோலாக மாற்றினார்.ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் கோல்கட்டா வீரரை தடுத்ததற்காக சென்னையின் எலோனாவுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. பின், 41, 42வது நிமிடங்களில் கோல்கட்டா அணியின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை சென்னை அணியினர் தடுத்தனர். முதல் பாதி முடிவில், கோல்கட்டா அணி 1 0 என முன்னிலை வகித்தது. சொந்த மண்ணில் விளையாடிய கோல்கட்டா அணியினர் இரண்டாவது பாதியில் துடிப்பாக விளையாடினர். இருப்பினும் கோல்கட்டா அணிக்கு 58, 59வது நிமிடங்களில் கிடைத்த கார்னர் வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டன. இதேபோல 64வது நிமிடத்தில் பெற்ற பிரீ கிக் வாய்ப்பிலும் கோல்கட்டா அணியினர் கோல் அடிக்க தவறினர். தொடர்ந்து போராடிய கோல்கட்டா அணிக்கு 87வது நிமிடத்தில் ஹியும் ஒரு கோல் அடித்தார். ;ஸ்டாப்பேஜ் நேரத்தில் எழுச்சி கண்ட சென்னை அணிக்கு பிக்ரு ஒரு கோல் அடித்தார். பந்தை 56 சதவீதம் தங்கள் வசம் வைத்திருந்த கோல்கட்டா அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. வாய்ப்பு எப்படி ஆட்டநேர முடிவில் கோல்கட்டா அணி 2 1 என வென்ற போது, பைனல் வாய்ப்பை இழந்தது. ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் சென்னை அணி பைனலுக்கு முன்னேறியது. அதாவது முதல் சுற்று அரையிறுதியில் சென்னை அணி 3 0 என வென்றது. இரண்டாவது சுற்று அரையிறுதியில் கோல்கட்டா அணி 2 1 என வெற்றி பெற்றது. இரண்டு சுற்றுகளின் முடிவில், ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் சென்னை அணி 4 2 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய கோல்கட்டா அணி பரிதாபமாக வெளியேறியது. வரும் 20ல் கோவாவில் நடக்கவுள்ள பைனலில், சென்னை கோவா அணிகள் மோதுகின்றன. குவிந்த ரசிகர்கள் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியை காண 68 ஆயிரத்து 340 பேர் வந்திருந்தனர். தவிர இரு அணிகளின் சக உரிமையாளர்களான அபிஷேக் பச்சன் (சென்னை), கங்குலி (கோல்கட்டா) வந்தனர். இதேபோல, இத்தொடரின் ஒருகிணைப்பாளர் நீட்டா அம்பானியும் போட்டியை கண்டு ரசித்தார். மெண்டோசாவுக்கு  அடி நேற்றைய அரையிறுதியில் சென்னை அணியின் நட்சத்திர வீரரான மெண்டோசாவை குறிவைத்து கோல்கட்டா அணியினர் விளையாடினர். ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் கோல்கட்டாவின் அகஸ்டின், மெண்டோசாவின் முகத்தில் தாக்கினார். இதனால் அகஸ்டினுக்கு ரெட் கார்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘எல்லோ கார்டு மட்டுமே காட்டப்பட்டது. இதேபோல 84வது நிமிடத்தில் கோல்கட்டாவின் டிரி, மெண்டோசாவின் ஜெர்சியை பிடித்து தடுத்தார். இதனால் டிரிக்கு எல்லோ கார்டு  காண்பிக்கப்பட்டது. ஹபாஸ் பிக்ரு மோதல் கடைசி நேரத்தில் கோல்கட்டா அணியின் பயிற்சியாளர் ஹபாஸ் மற்றும் சென்னையின் பிக்ரு இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. ஸ்டாப்பேஜ் நேரத்தில் மாற்று வீரராக வந்த பிக்ரு, முறையாக களமிறங்கவில்லை என கோல்கட்டா அணியின் பயிற்சியாளர் ஹபாஸ், லைன் அம்பயர்  மற்றும் மேட்ச் ரெப்ரி ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து ஹபாஸ், பிக்ரு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அப்போது அம்பயர்கள் ஹபாசை ஆடுகளத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தனர். இதனால் ஹபாஸ் ஆத்திரத்துடன் திட்டிக் கொண்டே வெளியேறினர். முதன்முறை கோல்கட்டாவுக்கு எதிரான அரையிறுதியில் கோல் அடிப்படையில் வெற்றி பெற்ற சென்னை அணி, முதன்முறையாக ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் பைனலுக்கு முன்னேறியது. கடந்த ஆண்டு நடந்த முதலாவது சீசனில் சென்னை அணி, அரையிறுதியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியிடம் 3 4 என்ற கணக்கில் தோல்வி அடைந்து ஏமாற்றியது.  இதேபோல இம்முறை பைனலுக்கு முன்னேறிய மற்றொரு அணியான கோவா அணியும் கடந்த முறை அரையிறுதி வரை வந்தது. இதில்பெனால்டி ஷூட் அவுட் முறையில் கோல்கட்டாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. கடந்த முறை பைனலுக்கு தகுதி பெற்ற கேரளா அணி, இம்முறை லீக் சுற்றோடு திரும்பியது. கோல்கட்டா அணி அரையிறுதி வரை வந்தது. எனவே இம்முறை இரண்டு புதிய அணிகள் பைனலுக்கு முன்னேறி இருப்பதால், பைனலில் வெற்றி பெறும் அணி புதிய சாம்பியனாக  வலம் வரும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad