Matrimony OTT-Platforms Jobs Coupons Business

இங்கிலீஸ் பிரீமியர் லீக் : சிங்கங்களை சிதைக்கும் சிறுவண்டு




அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பையை கென்யா வென்றாலோ இல்லை ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா, சீனாவை விட இலங்கை அதிக தங்கப் பதக்கங்கள் வென்றாலோ நமக்கு எப்படி இருக்கும்?  அப்படி ஒரு ஆச்சரியம், அதிர்ச்சி, வியப்பு அனைத்தும் கலந்த மனநிலையில்தான் இருக்கிறார்கள் பிரீமியர் லீக்  கால்பந்து ரசிகர்கள்.  அப்பொடியொரு அதிசயத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறது கத்துக்குட்டியான லெய்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி.
20 அணிகள் மோதும் பிரீமியர் லீக் தொடரில் கடைசி 3 இடங்கள் பிடிக்கும் அணிகள் வெளியேற்றப்பட்டு, சாம்பியன்ஷிப் தொடரில்  முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ஒவ்வொரு சீசனிலும் பிரீமியர் லீக்கில் இடம் பிடிக்கும். கடந்த சீசனில் கடைசி கட்டத்தில் திக்கித் திணறி தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டது லெய்செஸ்டர் அணி. இந்த சீசன் தொடக்கத்தில் கால்பந்து நிபுணர்கள் பலரும் தங்களது கருத்துக்கணிப்பை வெளியிட்டனர். அதில் 90 சதவிகதம் பேர் பொதுவாக இரண்டு கருத்துக்களைக் கூறினர். ஒன்று, சாம்பியன் செல்சி அணியே மீண்டும் பட்டம் வெல்லும் என்பது. அடுத்தது எந்த அணி வெளியேறுகிறதோ இல்லையோ லெய்செஸ்டர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து  வெளியேறும் என்று கூறினர்.

அசத்தும் லெய்ஸெஸ்டர் 

ஆனால் இரண்டும் உல்டாவாக நடந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சாம்பியனாகத் தொடரைத் தொடங்கிய செல்சி அணி 16-வது இடத்தில் தத்தளிக்க,  லெய்செஸ்டர் அணியோ முதலிடத்தில் கம்பீரமாய் உட்கார்ந்துள்ளது. காரணம் அவர்களது செயல்பாடு. ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தால் அவர்கள் இந்த இடத்தை எட்டிவிடவில்லை.இந்த சீசனின் தொடக்கம் முதல் சீரான சிறப்பான ஆட்டத்தை லெய்செஸ்டர் அணி வீரர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை விளையாடியுள்ள 16 பிரீமியர் லீக் போட்டிகளில், ஆர்சனல் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே தோற்றுள்ளது இந்த அணி.  இரண்டு ஆண்டுகளில் 250 மில்லியன் டாலர் செலவு செய்துள்ள பழம்பெருமை வாய்ந்த அணியான மான்செஸ்டர் யுனைடட் கூட இந்த சீசனில் மொத்தம் 21 கோல்களே அடித்துள்ளது.  ஆனால் லெய்செஸ்டர் அணியோ இதுவரை 34 கோல்கள் அடித்து அசத்தியுள்ளது. மான்செஸ்டர்யுனைடட், மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனல்,செல்சி, லிவர்பூல் ஆகிய ஐந்து அணிகள்தான் எப்போதும் பிரீமியர் லீக்கில் ஆதிக்கம் செலுத்தும்.  அந்த வரலாற்றை மாற்றி அதிசயம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் லெய்செஸ்டர் அணியின் சக்சஸ் பார்முலா இங்கே...

லெய்ஸெஸ்டர் மிரட்ட காரணங்கள் என்ன?

16 போட்டிகளில்  15 கோல்கள்:  வாலாட்டும் வார்டி இப்படியொரு பெயரை கால்பந்து உலகம் உச்சரிக்கும் என்று 2 ஆண்டு முன்னர் வரை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நான்கு ஆண்டுகள் முன்னர் வரை நான்காம் டிவிஷன் கால்பந்து தொடர்களில் விளையாடியவர் இங்கிலாந்தின் ஜேமி வார்டி. தனது வேகத்தாலும்,கோலடிக்கும் திறனாலும் ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்றம் கண்டு 2012-13 சீசனில் லெய்செஸ்டர் அணியில் இணைந்தார். கடந்த பிரீமியர் லீக் தொடரில் 6 கோல்கள்தான் அடித்திருந்தார். ஆனால் இந்த சீசன் தொடங்கியது முதல் கடிவாளம் கழற்றப்பட்ட குதிரையாக பாய்கிறார். 16 போட்டிகளில் இதுவரை 15 கோல்கள் அடித்துள்ளார் வார்டி.  எதிரணியின் தடுப்பாட்ட வீரர்களைத் திணறடிக்கும் வேகம், தொலைநோக்குப் பார்வை ஆகியவையே இவரின் வெற்றிக்குக் காரணங்கள். இவரது அணியினர் எங்கு பந்தை அடித்தாலும் அதை ரிசீவ் செய்ய வார்டி அவ்விடத்தில் இருப்பார். அதுவே தொடர்ந்து 11 பிரீமியர் லீக் போட்டிகளில் கோலடித்து சாதனை செய்ய பெரும் காரணம்.  அணியின் மீது இவரின் ஈடுபாடும் அளப்பரியது. ஸ்டோக் சிட்டி அணியுடனான போட்டியின் போது காலில் அடிபட்டிருந்த போது, பாதி போட்டியில் வெளியேறுவார் என நினைத்திருக்கையில், தொடர்ந்து விளையாடி கோலும் அடித்து அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுத்தார். இரண்டு வாரம் கழித்து கைவிரல் உடைந்திருந்த போதும் கட்டோடு விளையாடினார். அப்போட்டியிலும்கோலடித்து அசத்தினார் வார்டி. இப்படி அணிக்காக தனது உடலையும் பொருட்படுத்தாமல் விளையாடும் ஒரு வீரருக்கு வெற்றிகள் குவிவதில்  ஆச்சரியம் ஏதும் இல்லைதான்.

வித்தியாச வியூகங்கள் : அசத்தும் மேனேஜர்

கடந்த ஏப்ரலில்தான் லெய்செஸ்டர் அணியின் பயிற்சியாளராக பதவியேற்றார் கிளாடியோ ரனேரி. அப்பொழுது அனைவரும் இதை மோசமான தேர்வு என்றே குறை கூறினர். ஆனால் இன்று அனைத்தையும் பொய்யாக்கி, பிரீமியர் லீக்கின் இந்த மாததிற்கான சிறந்த மேனேஜர் விருதை இரண்டாவது முறையாக வென்றுவிட்டார்  .இளம் திறமைகளைக் கண்டறிந்த இவரது தேடல் மிகவும் அபாரமானது. ஃபக்ஸ், ஹூத் என பிற அணிகள் பெரிதும் கண்டுகொள்ளாத இளம் வீரர்களைக் கண்டறிந்து ஒன்றுபடுத்தினார் ரனேரி.  எந்த ஒரு பெரிய அணியின் மேனேஜரும் அடிக்கடி அணியில் சுழற்சி முறையில் மாற்றங்கள் செய்ய மாட்டார்கள்.ஓரிரு வீரர்களுக்கு மட்டுமே ஓய்வளிப்பார்கள். ஆனால் ரனேரி சற்று மாறுபட்டவர். தனது மொத்த அணியையும் சுழற்சிக்கு உட்படுத்துவார்.  வீரர்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் ஓய்வு வேண்டுமென்று கருதுபவர். அதனால்தான் சிறந்த மருத்துவர்கள் கொண்ட ஆர்சனல்,மான்செஸ்டர் யுனைடட் அணிகளின் பல வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டாலும் லெய்செஸ்டர் அணி அப்படி பெரிதாய் பாதிக்கப்படவில்லை. 90 சதவித பயிற்சியாளர்கள் அனைத்து போட்டிகளுக்கும் ஒரே ஃபார்மேஷனைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் இவர் ஒவ்வொரு எதரணியைப் பற்றியும் நன்கு அறிந்து அதற்கு ஏற்றார்போல் ஃபார்மேஷனை மாற்றிக் கொள்வார்.  ஒருசில போட்டிகளில் 4 நடுகள வீரர்களோடு களம் காணும் இந்த அணி,   ஒருசில போட்டிகளில் 5 நடுகள வீரர்களைக் களமிறக்கும். இப்படி போட்டிக்கு போட்டி இவர் மாற்றிய வியூகங்களே வெற்றிக்கு பெரிதும் துணை புரிந்தது. தனது அணியின் முன்களம் பலமாக இருப்பதையும் அதேசமயம் தடுப்பாட்டம் சற்று பலவீனமாக இருப்பதையும் உணர்ந்த ரனேரி,  தடுப்பாட்ட  வீரர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்தினார். ஒரு போட்டியில் எதிரணியை கோல் போட விடாமல் தடுத்தால் அணீயினருக்கு பிட்சா பரிசளிப்பார் ரனேரி. ஒரு பயிற்சியாளர் வீரர்களிடையே இவ்வளவு நெருக்கமாய் இருந்தது வீரர்களை மேலும் உற்சாகப் படுத்தியது.

பணம் வெல்லாது மனமே வெல்லும்

செல்சியின் மோரின்ஹோ, ஆர்சனலின் வெங்கர் முதலிய முன்னனி பிரீமியர் லீக் பயிற்சியாளர்கள் அனைவரும் லெய்செஸ்டர் அணியின் ஆட்டத்தை மெச்சுகிறார்கள். ஜனவரி மாதத்தில் குளிர்கால டிரான்பர் விண்டோ நெருங்கி விட்ட நிலையில், பணபலம் பொருந்திய ஐரோப்பிய அணிகள் லெய்செஸ்டர் அணியை முற்றுகையிட்டு முன்னனி வீரர்களை அள்ளிக்கொண்டு போகக்கூடும்.  அப்படி ஏதும் நடக்காதிருக்க பல கால்பந்து ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் ஒரு மாற்றத்தை  எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இப்போதுள்ள நிலையை தொடர்ந்து,  ஆண்டின் முடிவில் லெய்செஸ்டர் அணி, பிரீமியர் லீக் தொடரை வெல்லும் பட்சத்தில், அது உண்மையாகவே ஒரு கால்பந்து புரட்சியாக அமையும்.  உலக கால்பந்திற்கு  லெய்செஸ்டர் அணி சொல்வது இதுதான்- பணம் மட்டுமே என்றுமே வென்று விடாது;  திறமை பணத்திடம் விலை போகவும் போகாது.!



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad