தோனியிடம் அடி வாங்கியும் திருந்தாத முஸ்தாபிஜூர் ரஹ்மான்
வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் பேட்டிங் செய்யும் வீரர்கள் ரன்கள் எடுக்கும் போது குறுக்கிடுவதை தொடர்ந்து வழக்கமாக கொண்டிருக்கிறார். வங்கதேச பிரீமியர் லீக் போட்டியில் டாக்கா அணியில் ரஹ்மான் விளையாடினார். சிட்டகாங் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் டாக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 121 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்டகாங் அணிக்கு 5வது ஓவரை ரஹ்மான் வீசினார். அப்போது அந்த அணி 2 விக்கெட்டுக்கு 24 ரன்கள் பெற்றிருந்தது. அந்த ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட அனுமல் பந்தை அடித்து விட்டு ரன்கள் எடுக்க முயன்றார். ஆனால் ரஹ்மான் பேட்டிங் செய்யும் வீரர்கள் வழியில் குறுக்கிட்டதால் ரன் அவுட் முறையில் மறுமுனையில் இருந்த யாசிர் அலி வெளியேற்றப்பட்டார். ரஹ்மானின் இந்த செயல் எதிரணி பேட்டிங் செய்யும் வீரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. முன்னதாக மிர்புரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்களான ரோஹித், தோனி ரன்கள் எடுக்கும் போது ரஹ்மான் தொடர்ந்து அவர்களது வழியில் குறுக்கிட்டார். ரோஹித் முதலில் விரல் காட்டி எச்சரித்தார். ஆனால் தோணியோ ரஹ்மானை இடித்து தள்ளி காயப்படுத்தினார். பின்னர் இருவருக்கும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்தது. இருப்பினும் ரஹ்மான் ஆடுகளத்தில் குறுக்கிடுவதை இன்னும் தொடர்ந்தவாறே இருக்கிறார்.