கபடி..கோடி...மோசடி
போலி சான்றிதழ் கொடுத்து அரசிடம் இருந்து கோடிக்கணக்கில் பரிசு பெற்றுள்ளனர் கபடி வீரர்களான மன்ஜித் சில்லார், ராகேஷ் குமார். இவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை பாய உள்ளது. கடந்த ஆண்டு இன்ச்சான் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர்கள் மன்ஜித் சில்லார், ராகேஷ் குமார். இவர்கள், டில்லி நிஜாம்பூர் பகுதியில் வசிக்கின்றனர். ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றதற்காக டில்லி அரசிடம் பரிசுப்பணம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு அர்ஜுனா விருது பெற்ற சில்லார், டில்லியில் வசிப்பதாக சான்றிதழ் கொடுத்துள்ளார். ரயில்வேயில் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ள ராகேஷ் குமாரின் வீடும் டில்லி தான். ஆனால், அரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் பகதுர்கார் என்ற ஊரில் வசிப்பதாக, அம்மாநில அரசிடம் சான்றிதழ் தந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு அரசு சார்பில் இருவருக்கும் தலா ரூ. 2 கோடி தரப்பட்டது. அரியானா அரசு விதிப்படி, சம்பந்தப்பட்ட விளையாட்டு நட்சத்திரம், அரியானாவில் நிலையான முகவரி பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். வேறு மாநில அரசின் உதவியை பெற்றிருக்கக் கூடாது, என, தெளிவாக உள்ளது. இந்த விதிமுறையை இரு வீரர்களும் மீறியுள்ளனர். விசாரணை உறுதி: இதுகுறித்து மாநில விளையாட்டு இணை இயக்குனர் அருணா சூட் கூறுகையில், அரியானாவுக்காக தேசிய போட்டியில் பங்கேற்றவர்கள் மட்டும் தான் பரிசு பெற முடியும். கபடி வீரர்கள் தவறான சான்றிதழ் தந்தது உறுதியாகிறது. இதை எப்படி தயார் செய்தனர் என்பதை மாநில போலீசார் விசாரிப்பர். இது மக்கள் வரிப் பணம். மோசடி செய்து யாரும் வாங்க முடியாது என்றார்.