உலகக் கோப்பை டி20: ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் வீரர்
இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகர்களாக மைக் ஹஸ்ஸி மற்றும் முன்னாள் இந்திய-தமிழக வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மார்ச் 2016-ல் நடைபெறும் உலகக் கோப்பை டி20 போட்டிகளில் ஆரம்பக்கட்டங்களில் ஆலோசகராக ஸ்ரீராம் பணியாற்றுவார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 3 டி20 போட்டிகளுக்கான தொடரில் ஏரோன் பின்ச் தலைமை ஆஸ்திரேலிய அணியுடன் ஸ்ரீராம் ஆலோசகராக இணைகிறார். பிறகு மைக் ஹஸ்ஸி உலகக் கோப்பை போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய அணியுடன் இணைகிறார். இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவிக்கும் போது, “இந்தியாவுக்கு வரும் முன்னர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது. உலகக் கோப்பை போட்டிகளுக்கு இந்திய பிட்ச்கள், நிலமைகள் தொடர்பாக எஸ்.ஸ்ரீராம் ஆஸ்திரேலிய வீர்ர்களை தயார்படுத்துவார். இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா ஏ அணி பயணம் மேற்கொண்ட போது அணியின் ஆலோசகராக ஸ்ரீராம் பணியாற்றினார். பிறகு வங்கதேச தொடருக்கும் சீனியர் ஆஸ்திரேலிய அணிக்கு இவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார், ஆனால் அந்தத் தொடர் நடைபெறவில்லை. இதோடு மட்டுமல்ல ஆஸ்திரேலிய நேஷனல் பெர்ஃபாமன்ஸ் குழுவுடன் ஸ்ரீராம் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்” என்று கூறியுள்ளது. ஐபிஎல் அணியான டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றிய ஸ்ரீராம் 2000 மற்றும் 2004-ம் ஆண்டுகளுக்கிடையே இந்தியாவுக்காக 8 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். உலகக் கோப்பை டி20 தொடரில் மார்ச் 18-ம் தேதி தரம்சலாவில் நியூஸிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா முதல் போட்டியில் களமிறங்குகிறது.