தோனியின் மோசமான பேட்டிங் தொடர்கிறது: 1 ரன்னில் ஆட்டமிழந்தார்
கர்நாடகாவுக்கு எதிரான விஜய் ஹசாரே 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட் அணி வெற்றி பெற்றாலும், தோனியின் பேட்டிங் பார்ம் கவலைக்குரியதாக மாறியுள்ளது. 3-ம் நிலையில் களமிறங்கிய தோனி 8 பந்துகளைச் சந்தித்து 1 ரன்னில் 2-வது விக்கெட்டாக வெளியேறினார். கர்நாடகாவின் அலூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஜார்கண்ட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களையே எடுக்க முடிந்தது. ஆனால் தொடர்ந்து ஆடிய கடந்த முறை சாம்பியன் கர்நாடகா 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது. ஐபிஎல் கிரிக்கெட்டின் புதிய அணியான புனே அணி தோனியை இன்று ரூ.12.5 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ள நிலையில் அவரது பேட்டிங் பார்ம் இன்னும் மோசமாகிக் கொண்டே வருவது கிரிக்கெட் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்துவதாகும், அதுவும் ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடினமான ஒருநாள் தொடர் உள்ளது, பிறகு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வருகிறது. இந்நிலையில் அவரது உள்நாட்டு கிரிக்கெட் முயற்சி அவருக்கு பயனளிப்பதாக அமையவில்லை. ஜார்கண்ட் அணியில் இசாங்க் ஜக்கி 50 ரன்களையும், சவுரவ் திவாரி 43 ரன்களையும், குமார் தியோபிராட் 47 ரன்களையும் எடுத்தனர். இந்திய ஒருநாள், டி20 கேப்டன் தோனி 8 பந்துகளைச் சந்தித்து 1 ரன் எடுத்தார். அதுவும் கருண் நாயரின் சாதாரண ஒரு பந்தில் பவுல்டு ஆகி கடும் ஏமாற்றமளித்தார். 217 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய கர்நாடக அணியில் டெஸ்ட் வீரர் லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். ஜார்கண்ட் அணியின் ஷாபாஸ் நதீம் (3/15), சோனுகுமார் சிங் (3/20) ஆகியோர் பந்து வீச்சில் 169 ரன்களுக்குச் சுருண்டது கர்நாடகா. இந்த வெற்றி மூலம் ஜார்கண்ட் அணி பிரிவு பி-யில் 16 புள்ளிகளுடன் முதலிடம் வகித்து காலிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொண்டுள்ளது, கர்நாடக அணியோ 4 போட்டிகளில் பெற்ற 8 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது.