கோவாவில் ரஜினி - விஜய் சந்திக்க வாய்ப்பு
கோவாவில் ரஜினி, விஜய் நடிக்கும் இரு படங்களின் படப்பிடிப்பும் நடைபெற இருப்பதால் இருவரும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கபாலி' படத்தின் மலேசியா மற்றும் பாங்காக்கில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. தற்போது சென்னையில் இருக்கும் ரஜினி, இம்மாத இறுதியில் கோவாவில் துவங்கும் படப்பிடிப்புக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தான் நடைபெற்று வருகிறது. விஜய் - ஏமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வரும் படக்குழு, விரைவில் ஒரு பஸ் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் தலைப்பு அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (நவம்பர் 26) வெளியாக இருக்கிறது. 'கபாலி' மற்றும் 'அட்லீ - விஜய்' ஆகிய இரண்டு படங்களையுமே தாணு தயாரித்து வருகிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்புமே கோவாவில் நடைபெற இருப்பதால், ரஜினியும் விஜய்யும் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், ரஜினி - விஜய் இருவருமே தனியாக சந்தித்து உரையாடி நீண்ட நாட்கள் ஆகிறது. சமீப காலமாக இருவருமே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது மட்டுமே பேசியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.