Matrimony OTT-Platforms Jobs Coupons Business

நடிகர்-நடிகைகளின் சம்பளம் குறைக்கப்படுமா? திரைப்பட கூட்டுக்குழுவில் ஆலோசிக்க முடிவு







தமிழ் படங்கள் தயாரிப்பு எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 1990-களில் வருடத்துக்கு 80 படங்கள் வந்தன. இப்போது ஆண்டுக்கு 300 படங்கள் தயாராகின்றன. சிறுபட்ஜெட் படங்கள் குறைந்தபட்சம் ரூ.2 கோடி செலவில் எடுக்கப்படுகின்றன. பெரிய நடிகர்கள் படங்கள் செலவு ரூ.60 கோடிகளை தாண்டுகின்றன. பெரும்பாலான சிறு முதலீட்டு படங்கள் ஓரிரு நாட்கள் மட்டுமே ஓடுகின்றன. இந்த படங்களை எடுத்த தயாரிப்பாளர்கள் நஷ்டத்தையே சந்திக்கிறார்கள். அத்துடன் 650-க்கும் மேற்பட்ட சிறு பட்ஜெட் படங்கள் தியேட்டர்கள் கிடைக்காமல் முடங்கிக்கிடக்கின்றன. பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கும் பட அதிபர்கள் தயாரிப்பு செலவு அதிகரித்ததால் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாமல் திணறுகிறார்கள். வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டு போராடுகின்றனர். கடந்த காலங்களில் ரஜினிகாந்த், தன்னுடைய ‘பாபா, குசேலன்’ படங்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தார். கதாநாயகர்கள் நஷ்டஈடு கொடுக்க அவசியம் இல்லை என்றாலும் ரஜினிகாந்த் பெருந்தன்மையோடு நடந்துகொண்டதாக பாராட்டப்பட்டார். அதுபோல் தற்போது ‘லிங்கா’ படத்துக்கும் நஷ்டஈடு கொடுக்க ஏற்பாடு செய்தார். வேறு சில கதாநாயகர்கள் தங்கள் படங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட, தங்களுடைய அடுத்த படங்களை நஷ்டமடைந்த வினியோகஸ்தர்களுக்கு வழங்கி லாபத்துக்கு வழிசெய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றம், கேளிக்கை வரி விலக்கின் பலன் மக்களை சென்று அடையும் வகையில் புதிய உத்தரவை சமீபத்தில் பிறப்பித்துள்ளது. அதன்படி ரூ.120 டிக்கெட் கட்டணம் வசூலித்த மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இனிமேல் ரூ.85 மட்டுமே வசூலிக்க முடியும். இது தியேட்டர் அதிபர்களையும் தயாரிப்பாளர்களையும் அதிர வைத்துள்ளது. டிக்கெட் கட்டணம் குறைக்கப்படுவது தங்களுக்கு பெரிய சுமையை ஏற்படுத்தும் என்று கருதுகிறார்கள். இதில் இருந்து விடுபட ஒரே வழி தயாரிப்பு செலவை குறைப்பதுதான் என்ற முடிவுக்கு தயாரிப்பாளர்கள் வந்துள்ளனர். முன்னணி கதாநாயகர்கள் தற்போது ரூ.25 கோடியில் இருந்து ரூ.40 கோடிவரை சம்பளம் வாங்குவதாகவும் இளம் நடிகர்கள் ரூ.10 கோடியில் இருந்து 20 கோடி வரை வாங்குவதாகவும் தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். பிரபல நகைச்சுவை நடிகர்கள் ஒரு நாள் சம்பளம் ரூ.10 லட்சம் என்று நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது. கதாநாயகிகள் ரூ.1 கோடியில் இருந்து ரூ.2½ கோடி வரை வாங்குகிறார்கள் என்கின்றனர். இவர்களின் சம்பளத்தை குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. படங்கள் நஷ்டம் அடைந்தால் கதாநாயகர்கள் தங்கள் சம்பளத்தில் இருந்து 20 சதவீதத்தை திருப்பித்தரவேண்டும் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க கூட்டங்களில் வற்புறுத்தப்பட்டது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே விரைவில் திரைப்பட கூட்டுக்குழு கூட்டத்தை கூட்டி நடிகர்- நடிகைகள் சம்பளத்தை குறைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad