தளபதிக்கு பிறகு 'கபாலி'க்காக இரவு நேர படப்பிடிப்பில் ரஜினி
'தளபதி'க்குப் பிறகு 'கபாலி' படத்துக்காக இரவு நேர படப்பிடிப்பில் கலந்து கொண்டு ரஜினி நடித்திருக்கிறார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு முடிந்து, தற்போது மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மலேசியாவில் மலாகா நகரில் இருந்து கோலாலம்பூருக்கு சென்று தற்போது படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். மலாகா நகரில் இருந்து ரஜினி கிளம்பும் போது, அங்குள்ள மக்கள் மிகவும் உற்சாகமாக அவரை வழியனுப்பி வைத்தார்கள். இப்படத்துக்கான படப்பிடிப்பு தேதிகளைப் பட்டியலிட்ட போது, ரஜினியிடம் ஒரு நாள் இரவு நேர படப்பிடிப்பு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். அப்போது 'தளபதி' படத்துக்குப் பிறகு இரவு நேர படப்பிடிப்பில் கலந்து கொள்வதில்லை, ஒரு நாள் தானே பண்ணித் தருகிறேன் என்று பதிலளித்திருக்கிறார் ரஜினி. முதல் நாள் இரவு 12 மணி வரை படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. இன்னொரு நாளும் வேண்டும் சார் என்று ரஜினியிடம் கேட்க, அந்த நாளும் இரவு 2 மணி வரை நடித்துக் கொடுத்திருக்கிறார். கடைசியாக இன்னொரு நாள் வேண்டும் சார் என்று ரஞ்சித் கேட்க, அதிகாலை 4:30 மணி வரை இருந்து நடித்துக் கொடுத்திருக்கிறார் ரஜினி. கதைக்காக ரஜினியின் ஆர்வமிக்க ஒத்துழைப்பைப் பார்த்து மிகவும் பிரமித்துப் போயிருக்கிறது படக்குழு.