பகல்-இரவு ஆட்டமாக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி: ரசிகர்கள் ஆர்வம்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 138 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், முதன் முதலாக டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில், ஆஸ்திரேலியா -நியூசிலாந்து அணிகள் இடையே நடக்கும் இந்த போட்டியில் ஒரு முக்கிய மாற்றம் நடக்கவுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் எப்போதும் சிவப்பு நிற பந்தையே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் பகல்-இரவு ஆட்டத்தில் சிவப்பு நிற பந்து தெளிவாக தெரியாது என்பதால், தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு தற்போது இளஞ்சிவப்பு (Pink) நிறத்திலான பந்தினை பயன்படுத்த உள்ளனர். ஒரு நாள் போட்டி, டி20 போன்ற கிரிக்கெட் போட்டிகளால் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஈர்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே குறைந்துவிட்டது. இதனை சரிசெய்ய பலரும் பலவித யோசனைகளை ஐ.சி.சி-க்கு வழங்கி வந்தனர். இந்நிலையில், தான் டெஸ்ட் போட்டிகளை பகல்-இரவு போட்டிகளாக சோதனை செய்து பார்க்கலாம் என்ற யோசனை பிறந்துள்ளது. வரும் நவம்பர் 27ம் தேதி , ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே நடக்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி மதியம் 2 மணிமுதல் இரவு 9 மணி வரை தொடரும் என கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீர்ரகளும், இளஞ்சிவப்பு பந்தை பயன்படுத்தி நடக்கவுள்ள பகல்-இரவு டெஸ்ட் போட்டி சோதனை வெற்றி பெறுமா என ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.