நான் அப்படி சொல்லவே இல்லை: ஷாருக்கான் திடீர் பல்டி
நாட்டில் சகிப்புத்தன்மையற்ற சூழல் நிலவுவதாகக் கூறி எழுத்தாளர்கள், திரைப்பட கலைஞர்கள் உள்ளிட்ட பலர் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். இதற்கு ஆதரவாக அண்மையில் கருத்து தெரிவித்திருந்த பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், திடீரென, சகிப்புத்தன்மையற்ற நாடாக இந்தியா மாறிவிட்டது என்று நான் ஒருபோதும் கூறவில்லை என்றும், தனது கருத்து திரிக்கப்பட்டதாகவும் கூறி பல்டி அடித்துள்ளார். "நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாத நிலை உச்சத்தில் உள்ளது. சகிப்புத்தன்மை இல்லாத நிலை பெருகி வருகிறது. நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாத நிலைக்கு எதிராக, நான் பெற்ற பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை திருப்பியளிப்பது குறித்து மறுமுறை சிந்திக்க மாட்டேன்" என அண்மையில் ஷாருக்கான் பேட்டியளித்தார். ஷாருக்கானின் இந்த கருத்தினை எதிர்த்த இந்துத்துவ அமைப்புகள் ஷாருக்கான் படத்தை யாரும் பார்க்காதீர்கள், அவர் பாகிஸ்தானுக்கு போகட்டும் என்று வழக்கம் போல் விமர்சித்தன. இந்நிலையில், சகிப்பின்மை கொண்ட நாடாக இந்தியா மாறிவிட்டது என்று தான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என நடிகர் ஷாருக்கான் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து மும்பையில் உள்ள தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஒரு சில விவகாரங்கள் குறித்து நான் தெரிவித்த கருத்தை சிலர் திரித்து கூறிவிட்டனர். இதனால் பிரச்சனையில் சிக்கிக் கொண்டேன். சகிப்பின்மை குறித்து சிலர் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்தேன். இந்தியாவை வளர்ச்சியடைந்த மற்றும் மதசார்பற்ற நாடாக மாற்றுவதில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று தான் தெரிவித்தேன். ஆனால், அதனை அவர்களுக்கு ஏற்றபடி திரித்து விட்டனர்" என்றார். அண்மையில் சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்த அமீர் கானை இந்துத்துவ அமைப்புகள் கட்டம் கட்டுவதே ஷாருக்கானின் இந்த திடீர் பல்டிக்கு காரணம் என்று பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.