தோனி–கோஹ்லி ஒப்பிடலாமா *என்ன சொல்கிறார் கபில்
தோனியின் சாதனைகளை எட்ட கோஹ்லி இன்னும் நிறைய துாரம் செல்ல வேண்டும். இருவரையும் இப்போது ஒப்பிட முடியாது. தந்தைக்கு தந்தை இடம்; மகனுக்கு மகன் இடம் தான் அளிக்க முடியும்,என, கபில் தேவ் தெரிவித்தார். இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக வர்ணிக்கப்படுபவர் தோனி, 34. இரண்டு உலக கோப்பை(2007ல் டுவென்டி20 2011ல் 50 ஓவர்) வென்று தந்தார். களத்தில் மிகவும் கூலாக செயல்படக்கூடியவர். இவருக்கு நேர்மாறாக ஆக்ரோஷமாக விளையாடுபவர் டெஸ்ட் அணி கேப்டனான கோஹ்லி, 26. இருவரையும் ஒப்பிட்டு பேசுவது வழக்கமாக உள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கூறியது கடந்த 2007ல் இருந்து கேப்டனாக உள்ளார் தோனி. நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கோஹ்லி தற்போதுதான் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்றுள்ளார். தோனியின் சாதனைகளை எட்ட,இன்னும் அதிக துாரம் செல்ல வேண்டும். தந்தைக்கு தந்தை இடமும், மகனுக்கு மகன் இடமும் தான் அளிக்க முடியும். தந்தை அந்தஸ்தை ஒருநாள் மகன் பெறுவார் என்பது உறுதி. தற்போது இருவரையும் ஒப்பிடுவது சரியல்ல. சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் கோஹ்லி, கேப்டன் பணியிலும் முத்திரை பதிப்பார் என நம்புகிறேன்.
சாஸ்திரிக்கு ஆதரவு
உள்ளூர் அணிக்கு சாதகமாகத்தான் ஆடுகளம் அமைக்கப்படும். இதற்கான எல்லா உரிமையும் அவர்களுக்கு உள்ளது. எதிரணியின் கோரிக்கைப்படி, கிரிக்கெட் விளையாட முடியாது. தென் ஆப்ரிக்கா சென்றால் கூட, அவர்களுக்கு ஏற்ற வகையில்தான் ஆடுகளம் இருக்கும். இந்த விஷயத்தில் இந்திய அணி இயக்குனர் ரவி சாஸ்திரியின் கருத்துக்கு ஆதரவு அளிக்கிறேன்.
சேவக்கின் திறமை
இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை சேவக் அளித்துள்ளார். இவர் வழியனுப்பு போட்டி (பேர்வெல் மேட்ச்) நடத்தவில்லை என சொல்கிறார். எல்லா வீரர்களுக்கும் விரும்பியது கிடைப்பதில்லை. ஒரு போட்டியில் அதிகமாக பங்கேற்பதால் அல்லது குறைவாக விளையாடுவதால் வீரரின் திறமை குறைந்துவிடாது. இவ்வாறு கபில்தேவ் கூறினார்.