பிரிமியர் தொடருக்கு தோனி பாராட்டு
பிரிமியர் தொடரால் பல்வேறு அணி வீரர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரித்து விட்டது. இதனால் சர்வதேச போட்டிகளின் போது வீரர்களுக்கு இடையில் ஏற்படும் வார்த்தைப் போர் குறைந்து விட்டது என, கேப்டன் தோனி தெரிவித்தார். இந்திய ஒருநாள் மற்றும் டுவென்டி அணிகளின் கேப்டன் தோனி, 34. டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றதால், தற்போது ஓய்வில் உள்ளார். கிரிக்கெட் குறித்து தோனி கூறியது கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு. இதில் வெற்றி பெற வேண்டும் விளையாடும் நாம், இதற்காக சரியான முறையில் போராட வேண்டும். இந்தியாவில் நடக்கும் பிரிமியர் தொடரில் பல்வேறு அணி வீரர்கள் ஒருங்கிணைந்து பங்கேற்கின்றனர். இதனால் வெவ்வேறு கலாசாரங்கள் கொண்ட வீரர்கள், ஒருவருக்கு ஒருவர் டிரசிங் ரூமை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வீரர்களுக்கு இடையே நட்பு ரீதியிலான ஒரு பிணைப்பு உருவாகிவிட்டது. இதனால் சர்வதேச போட்டிகளில் வீரர்களுக்கு இடையே அடிக்கடி நடக்கும் வார்த்தைப் போர் குறைந்து விட்டன. பல்வேறு நாடுகளில் நடக்கும் டுவென்டி தொடர்கள் இதைத் தான் செய்கின்றன. இந்தியாவில் பிரிமியர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் சர்வதேச வீரர்களுடன் நெருக்கமான முறையில் நட்பு வளர்த்திருக்க முடியாது. மற்றபடி சக இந்திய அணி வீரர்களிடம் கூட அதிகமாக பழக முடிவதில்லை. ஏனெனில் பிரிமியர் தொடரில் அவர்களது பாலிசி என்னவெனத் தெரியாது. நட்பு பாராட்டுவதால் தேவையில்லாத பிரச்னைகள் வந்து விடலாம் என்பதற்காகவே இவைகளை தவிர்த்து வந்தேன். இவ்வாறு தோனி கூறினார்