ரஜினி, கமல் உட்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் தீபாவளி பரிசுப் பொருட்கள்
தீபாவளியை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தற்போது புதிதாக பதிவியேற்று இருக்கிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் அனுப்ப புதிய நிர்வாகிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு சேலையும் மற்றும் ஒரு பை இனிப்பும் இப்பரிசுப் பொருட்களில் அடங்கும். ரஜினி, கமல் உட்பட 3500 உறுப்பினர்களுக்கும் இப்பரிசு பொருட்கள் அவர்களது வீட்டிற்கே சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. அதே போல், நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடக நடிகர்கள் பற்றிய விவரம் அறியும் கணக்கெடுப்பும் விரைவில் துவங்க இருக்கிறார்கள். நடிகர் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் பத்து பேர் தனி குழுக்களாக மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, எல்லா மாவட்டங்களுக்கும் செல்லவிருக்கிறார்கள். அங்குள்ள நாடக நடிகர்களை வீட்டுக்கே நேரில் சென்று அவர்களை சந்தித்து வாழ்வாதாரம் பற்றியும் ,வருமானம் மற்றும் அவர்களது தற்போதைய நிலை, செய்யும் தொழில் போன்றவைகளை கணக்கெடுத்து தலைமைக்கு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். இப்பணி தீபாவளி பண்டிகைக்கு பிறகு துவங்க இருக்கிறார்கள்.