இந்த தடவையுமா? கவலையில் இருந்த அலாஸ்டர் குக்கை வம்பிழுத்த மிஸ்பா
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களுக்கு சுருண்டது. அணித்தலைவர் மிஸ்பா 71 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில், ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சமிட் படேல், மொயீன் அலி, பிராட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. 34 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. குக் (48), பெல் (24) விளையாடி வருகின்றனர். முன்னதாக டாஸ் போடும் போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா டாசில் வெற்றி பெற்றார். அப்போது கிண்டல் அடிக்கும் விதமாக அவர் குனிந்து குக்கின் முகத்தை பார்த்தார். உடனே குக் தனது முகத்தை திருப்பி கொண்டார். பின்னர் குக்கின் முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் சொன்னார் மிஸ்பா. அதாவது இந்த தொடரில் 3 டெஸ்ட் போட்டியிலுமே பாகிஸ்தான் தலைவர் மிஸ்பா தான் டாஸ் வென்றார் . மேலும், தொடர்ச்சியாக 6 முறை டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் இண்டிகாப் ஆலம் தொடர்ச்சியாக 7 முறை டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்று முதலிடத்தில் உள்ளார்.