தோனி தலையில் பெரிய குச்சி வைத்து அடிக்கிறார்கள்: கிறிஸ் கெய்ல்
தற்போது தோல்விகளால் துவண்டு கிடக்கும் தோனி அதிலிருந்து மீண்டு வந்து மிரட்டுவார் என்று மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். இந்த ஆண்டு இந்திய அணித்தலைவர் டோனிக்கு மோசமான ஆண்டாக உள்ளது. அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் தோல்வியை தழுவிய தோனி, இந்த ஆண்டு இந்திய அணிக்கு ஒரு கோப்பை கூட வென்று கொடுக்கவில்லை. இந்நிலையில் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தோனியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்லும் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், "தோனி மிகச்சிறந்த மனிதர். எல்லா இந்திய ரசிகர்களும் இதை தான் கூறுவார்கள். அவர்கள் மட்டுமல்ல உலக ரசிகர்கள் அனைவருக்கும் தோனி அப்படி தான். அவர் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறந்த முறையில் பங்காற்றியுள்ளார். அதே போல் இந்திய அணியின் வெற்றிக்காகவும் அவர் பல வழிகளில் போராடி இருக்கிறார். இரண்டு தொடர்களில் தோல்வி பெற்றதால் தோனி தலையில் பெரிய குச்சி வைத்து அடிக்கிறார்கள். ஆனால் அவர் ஒரு சாம்பியன். அவர் அந்த தோல்விகளில் இருந்து மீண்டு வந்து மிரட்டுவார்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் பற்றி கூறுகையில், ”தென் ஆப்பிரிக்கா சிறந்த அணி. ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் டெஸ்ட் தொடரில் முதல் போட்டி தொடரை தீர்மானிக்கும். இந்தியா சிறந்த தொடக்கம் கொடுக்கும் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.