ஏலியன்களால் மூன்றாம் உலகப்போர் நடக்கப்போகுது
‘நிலநடுக்கங்கள், கிரகணங்கள் பின்னணியில் வேற்றுக் கிரகவாசிகளான ஏலியன்கள் இருக்கிறார்கள். 2019-ல் ஏலியன்களால் மூன்றாம் உலகப் போர் நடக்கும் ஆபத்தும் இருக்கிறது’ என்ற திகில் கடிதத்தை டைம்பாஸுக்கு அனுப்பியிருந்தார் கும்பகோணத்தைச் சேர்ந்த கே.பெரியசாமி. ஏலியன்களை எண்களோடு தொடர்புபடுத்தி ஆராய்ச்சி செய்துவரும் டெலிபதி நிபுணரான பெரியசாமியை நேரில் பார்த்த அனுபவத்தில் அவர் சொன்ன அத்தனையும் எழுதினால் சுவற்றில் முட்டிக்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவீர்கள் என்பதால், சிலவற்றைத் தருகிறேன்‘‘கும்பகோணம்தான் எனக்கு சொந்த ஊர். 3 1/2 வயசு இருக்கும்போது ஒண்ணுக்கிருக்க ஒரு சந்துக்குள்ள போனேன். அரவான் சிலையைப் பார்த்திருக்கீங்களா? அதே மாதிரி ஓர் ஏலியன் அங்கே இருந்த திண்ணையில தலையாட்டிக்கிட்டே உட்கார்ந்திருந்தது. மெதுவா அதுக்குப் பக்கத்துல போய் தொட்டுப்பார்த்தேன். கொழகொழனு பாம்பைத் தொட்ட மாதிரி உணர்ச்சி. பயத்துல காட்டுக்கத்து கத்த ஆரம்பிச்சுட்டேன். அப்புறம் எங்க அம்மாதான் அந்த ஏலியனை விரட்டிவிட்டாங்க’’ என்று ஆரம்பிக்கும் பெரியசாமிக்கு வயது 60. திருமணம் ஆகவில்லை. தினம் தினம் நினைத்த நேரத்தில் ‘டெலிபதி’ மூலமாக ஏலியன்களுடன் பேசுவாராம், பார்க்கத் தோன்றினால் கனவு வழியாகப் பார்த்துக்கொள்வாராம். ‘‘எங்க அம்மா எல்லா கடவுள்கள்கிட்டேயும் சகஜமா பேசுவாங்க. அவங்க மூலமாதான் எனக்கு இந்தப் பிரபஞ்ச சக்தி கிடைச்சுது. அந்தப் பிரபஞ்ச சக்தி மூலமாதான் நான் ஏலியன்ஸ்கூட பேசிட்டு இருக்கேன். ஒருத்தர் மனசுக்குள்ள புகுந்து ‘டெலிபதி’ மூலமா பேசுற வித்தையை எனக்குச் சொல்லிக்கொடுத்தது அவங்கதான். 13, 19-ம் நம்பர் ஏலியன்ஸ் (?!) நான் எப்போ கூப்பிட்டாலும் வந்துடும். 89-ம் நம்பர் ஏலியன் மட்டும்தான் லேட்டாக்கும்’’ என கிறுகிறுக்கவைத்தவரிடம் ‘‘ஏலியன்ஸ் ஏன் வர்றாங்க? எதுக்கு வர்றாங்க?’’ எனக் கேட்டேன். ‘‘ பூமியை அவங்க எடுத்துக் கணும். இதுதான் அவங்க நோக்கம். 11, 13, 14, 19, 89னு ஏலியன் களுக்குனு சில அடையாள எண்கள் இருக்கு. அதை மனுஷங்க பயன்படுத்தினா, ஏலியன்ஸ் கண்டிப்பா டென்ஷன் ஆகிடும். நேத்துகூட பேப்பரைப் படிச்சீங்களா? அரபு நாடுகளில் நடைபெறும் போருக்காக நாளொன்றுக்கு 58 கோடி செலவுனு சொல்றார் ஒபாமா. தமிழ்நாட்டில் அம்மா மருந்தகங்களுக்காக 58 கோடி ஒதுக்கப்படுகிறதுனு செய்தி வருது. இதனால என்னனு யோசிக்கிறீங்களா, 5+8 = 13. இது ஏலியன்களுடைய அடையாள எண்கள்ல ஒண்ணு. சமீபத்துல சீனாவுல ஒரு கப்பல் கவுந்து 431 பேர் இறந்தாங்க. அந்தக் கப்பலோட நீளம் எவ்வளவு 76 அடி. கூட்டுத்தொகை 13. காணாமல் போனவர்கள் 11 பேர். சம்பவம் நடந்த நேரம் 9 மணி 28 நிமிடம். இதோட கூட்டுத்தொகை 19. எல்லாமே ஏலியன்களுடைய அடையாள எண்கள்தான்’’ என்றவர், ‘‘இன்னொரு விஷயம் சொல்றேன். ஆராய்ச்சி பண்ணிப் பாருங்க’’ என்று தொடர்ந்தார்.‘‘நிலநடுக்கம், பூகம்பம் போன்ற பேரழிவுகளுக்கு மட்டுமல்ல... சின்னச் சின்ன விபத்துகளுக்குக்கூட ஏலியன்களின் அடையாள எண்கள்தான் காரணமா இருக்கும். உலகத்துல மட்டுமில்ல, இந்தியாவுல, தமிழகத்துல இருக்கிற அரசியல் தலைவர்களுக்குக்கூட அவங்களே அறியாம ஏலியன்கள்தான் வழிகாட்டுதலா இருக்காங்க. அதனால அவங்களுடைய வாயால, அடையாளக் குறியீடுகளைச் சொல்லவெச்சு, அதைப் பார்த்து அவங்களே டென்ஷனாகி, மக்களை அழிச்சுக்கிட்டு இருக்காங்க. இதைத் தடுக்க ஒரே வழிதான் இருக்கு. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எல்லாம் 11, 13, 14, 19, 89... போன்ற ஏலியன்களின் அடையாளக் குறியீடுகளை அச்சடிக்கக் கூடாது. இல்லைனா, 00 என்ற குறியீட்டை அடிக்கடி பயன்படுத்தணும். ஏன்னா, 00 குறியீடு ஏலியன்களை விரட்டும் குறியீடு’’ என இடைவிடாமல் காதைத் துளைத்துக்கொண்டிருந்த பெரியசாமியிடம் ‘‘ஏலியன்கள் எங்கு இருக்கிறார் கள், என்ன செய்கிறார்கள்?’’ என்று திசை மாற்றினேன். ‘‘பூமிக்கு அடியில பாறைகள் இருக்குல்ல? அதுல சிலிக்கானும் அலுமினியமும் இருக்கிற பகுதியில்தான் ஏலியன்ஸ் இருக்காங்க. அவங்களைத்தான் நாம நாகலோக மனிதர்கள்னு சொல்றோம். மத்தபடி பறக்கும் தட்டுல இருந்து வர்ற ஏலியன்கள் எல்லாம் இவங்களோட பங்காளிங்க’’ எனப் பதறவைத்துவிட்டுத் தொடர்ந்தார். ‘‘ஆமா தம்பி. 135, 14, 13 குறீயிடுகள் செவ்வாய்க் கிரகவாசிகளுடையது. பூமிக்கு அடிக்கடி வர்றது இவங்கதான். 11 என்பது சந்திரவாசிகளைக் குறிக்கும். 19 எண் கொண்டவர்கள் சனிக் கிரகவாசிகள். இப்படி நிறைய கேட்டகிரி இருக்கு. தீவிரவாதிகளை அதிகப்படுத்துவதுதான் அவங்களோட முக்கியமான டார்கெட். அனேகமா, 2019-ல் மூன்றாம் உலகப் போருக்கான காரணங்களை இப்பவே அவங்க உருவாக்கிக்கிட்டு இருக்காங்கனு நினைக்கிறேன். சொல்றதைச் சொல்லிட்டேன். நான் சொன்னதையெல்லாம் காமெடியா எடுத்துக்காம சீரியஸா இருந்து, ஏலியன்களோட கொட்டத்தை அடக்க வேண்டியது உங்க பொறுப்பு. ஏன்னா, நான் அவங்களுடைய ஆட்டத்தை நிறுத்தினா, என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கு!’’ என்று சீரியஸாக ஃபீலிங் காட்டுகிறார் பெரியசாமி.