ஐ.எஸ். எல் கால்பந்து: தோனி முன்னிலையில் டெல்லியை பந்தாடியது சென்னை
இந்தியன் சூப்பர் லீக் தொடரில் சென்னை அணி 4 கோல்கள் அடித்து, டெல்லி டைனமோஸ் அணியை பந்தாடியது. இந்த வெற்றியையடுத்து சென்னை அணி, புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்துக்கு சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தை காண, 26 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியும் போட்டியை ரசிக்க நேரில் வந்திருந்தார்.
இந்த போட்டி சென்னை அணிக்கு மிக முக்கியமானது. அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள, சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த இக்கட்டான நிலையில், சென்னை அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. முன்களத்தில் மெண்டோசா, ஜீஜே கூட்டணி டெல்லி தடுப்பாட்டத்தை முறியடித்து, அடிக்கடி கோல் கம்பத்தை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தது.
ஓயாத மெண்டோசா அலை
இந்த சீசனின் கோல் அடிக்கும் மெஷின் என்று வருணிக்கப்படுபவரான ஜான் மெண்டோசா, நேற்றைய ஆட்டத்திலும் சென்னையின் கோல் கணக்கைத் தொடங்கினார். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஜீஜே கொடுத்த பாசை, அவர் அபாரமாக கோலாக்கினார் . இது இத்தொடரில் அவர் அடிக்கும் 10 வது கோல் ஆகும். முதல் கோலுக்கு உதவிய ஜீஜேதான், சென்னை அணி இரண்டாவது கோலடிக்கவும்
துணைபுரிந்தார். ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் ஜீஜே அடித்த பந்தை, டெல்லி வீரர்கள் தடுக்கத் தவற அதை எளிதில் கோலாக்கினார் பெலிசாரி.
மீண்டும் நான்கு கோல்கள்
ஜீஜேவின் அபார ஆட்டம் அதனோடு ஓயவில்லை. போட்டியின் 40-வது நிமிடத்தில் டெல்லி கோல்கீப்பர் டொப்லசை ஏமாற்றி, அவரும் தன் பங்குக்கு ஒரு கோலடிக்க, முதல் பாதியிலேயே சென்னை அணி மூன்று கோல்கள் முன்னிலை பெற்றது. சென்னை அணியின் இந்த ஆக்ரோஷ ஆட்டத்தை எதிர்பாராத டெல்லி வீரர்கள் தடுமாறிப்போயினர். இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து மாற்று வீரர்களைக் களமிறக்கினார் டெல்லி பயிற்சியாளாரான ராபர்டோ கார்லோஸ். ஆனால் அவர்களால் சென்னையின் தடுப்பரணை உடைக்க முடியவில்லை.இதற்கிடையே டெல்லி அணிக்கு ஜீஜேவால் மீண்டுமொரு அடி விழுந்தது. வலது புறமிருந்து மெண்டோசா கோல் நோக்கி அடித்த பந்தை, டெல்லி கோல்கீப்பர் தடுக்க முற்பட்டார். ஆனால் எதிர்பாராமல் அது ஜீஜேவுக்கு கிடைக்க, அவர் அதனை மீண்டும் எளிதாக கோலாக மாற்றினார். இந்த ஆட்டத்தில், இறுதி வரை டெல்லி வீரகளால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில், சென்னை அணி 4-0 என்ற கணக்கில் டெல்லியயை வென்றது.
கோவா அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்திலும், சென்னை அணி 4 கோல்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னை அணி, 16 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், டெல்லி அணி 18 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.