பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் நடால், பயஸ் இணைகின்றனர்
டென்னிஸ் அரங்கின் கனவு ஜோடியாக பயஸ் நடால் கூட்டணி உருவெடுத்துள்ளது. சமீப காலமாக தோல்வியால் துவண்டு போயுள்ள நடாலுக்கு, பயஸ் மூலம் மாற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ், 42. இவர், ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டிகளில் 100 ஜோடிகளுக்கு மேல் இணைந்து விளையாடிய 47வது வீரர் என்ற பெருமை பெற்றவர். இந்நிலையில் பயஸ், அடுத்த வாரம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கவுள்ள பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில், 14 முறை கிராண்டஸ்லாம் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலுடன், 29, இணைந்து விளையாட உள்ளார். இதற்கான அறிவிப்பை பயஸ், தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் பயசின் 106வது ஜோடியானார் நடால். முன்னாள் இந்திய வீரர் ஜீஷான் அலி தான் பயசின் முதல் ;பார்ட்னர் இருவரும் 1990ல் சேர்ந்து விளையாடினர். இந்த ஆண்டு கலப்பு இரட்டையரில் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி ஆஸி., ஓபன், விம்பிள்டன் மற்றும் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் கோப்பை வென்றது. காயத்தால் பாதிக்கப்பட்ட நடாலை பொறுத்தவரை இந்த ஆண்டு ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் கூட வெல்லவில்லை. பயசுடன் ஜோடி சேர்ந்த நேரம் நடாலின் டென்னிஸ் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். நடாலின் இளமையும், பயசின் அனுபவமும் கைகொடுக்கும் பட்சத்தில், பெண்கள் இரட்டையரில் ஆதிக்கம் செலுத்தி வரும் சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ், 35, சானியா, 28, ஜோடி போல வலம் வரலாம்.