9வது முறையாக பட்டம் வென்ற சானியா ஜோடி
உலகச் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா (இந்தியா)- ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. 'டாப்-8' வீராங்கனைகள் பங்கேற்கும் உலகச் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சானியா (இந்தியா)- ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி ஸ்பெயினின் கார்பின் முகுருசா- கார்லா சுவாரஸ் நவோரா ஜோடியை எதிர்கொண்டது. இதில் சானியா- ஹிங்கிஸ் அனல் பறக்கும் ஆட்டத்திற்கு ஸ்பெயின் ஜோடியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 6-0 என சானியா ஜோடி வென்றது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சானியா- ஹிங்கிஸ் ஜோடி 2வது செட்டை 6-3 என கைப்பற்றி 2-0 என ஸ்பெயினின் கார்பின் முகுருசா- கார்லா சுவாரஸ் நவோரா ஜோடி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இது சானியா- ஹிங்கிஸ் ஜோடியின் 9வது பட்டம் ஆகும். இந்த ஜோடி விம்பிள்டன், அமெரிக்க ஓபன் உள்பட 9 சாம்பியன் பட்டத்தை இந்த வருடம் தட்டிச் சென்றுள்ளது.