தூங்காவனம் படத்திற்கு போட்டி வேதாளமா த்ரிஷா பதிலளிக்கிறார்
தூங்காவனம் படம் மூலம் இரண்டாம்முறையாக கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா. சமீபத்தில் அவர் படம் குறித்தும், தன் சொந்த விஷயங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளார். முதல் முறையாக போலீஸாக நடித்துள்ளேன். எனக்கும் கொஞ்சம் படபடப்பாகத்தான் இருக்கிறது.இந்தப் படம் ரீமேக்காக இருப்பினும் முழுமையான இந்தியப்படம். படத்தில் போரடிக்கும் விஷயம் ஒன்று கூட இல்லை. கமல் சார் எப்போதுமே ஒரு படத்தை இயந்திரப் பாணியில் உருவாக்க மாட்டார். எல்லாவற்றிற்கும் முன்பே ஒத்திகை பார்க்கப்பட்டு பின்னர் தான் படமாக்கப்படும். மேலும் எனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கூட படப்பிடிப்பில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். இது ஹாலிவுட் பாணியிலான சினிமா உருவாக்கம் எனலாம். உங்களை எல்லா விதத்திலும் ஈடுபடுத்தினால் மட்டுமே ஒரு நல்ல படத்தை உருவாக்க முடியும். இந்தப் படத்திற்காக நான் டப்பிங் பேசியுள்ளேன். ஒரு சில படங்களில் நான் என் சொந்தக் குரலில் பேசியுள்ளேன். கமல் சார் குறிப்பிட்டு ஒரு விஷயம் சொல்லுவார். உங்களுக்கு ஒரு மொழி தெரியுமானால் நீங்களே அந்தக் குரலில் டப்பிங் பேசுங்கள் என்பார்.எப்பேர்ப்பட்ட டப்பிங் ஆர்டிஸ்ட்டாக இருப்பினும் உங்களது கேரக்டர் , குரலின் தனித்தன்மையை உணர முடியாது. சொந்தக் குரலில் டப்பிங் பேசுவது படத்தில் உங்கள் கேரக்டருக்கு மேலும் மெருகு சேர்க்கும் என அவர் எப்போதும் சொல்வார். அஜித் படமான வேதாளம் போன்ற பெரிய படங்களும் தீபாவளி ரிலீஸில் இருக்கிறதே என்ற கேள்விக்கு. நேர்மையாக சொல்கிறேன். இந்த ஆரோக்கியமான போட்டி தேவைதான். எனக்கு அஜித் படம் குறித்து தெரியாது. எனினும் இரண்டு படங்களும் முற்றிலுமாக வேறு வேறு படங்கள். 2015 உங்களுக்கு எப்படி இருக்கிறது என்றபோது. வேலையைப் பொருத்தவரை திருப்தியாக இருக்கிறது. ஆனால் சொந்த வாழ்வில் தான் சில ஏற்ற இறக்கங்கள். எனினும் அதை நான் என்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள நடந்த வாழ்க்கைப் பாடங்களாகவே பார்க்கிறேன். மேலும் நான் காதலில் விழவும் தயாராகத்தான் இருக்கிறேன். எதிர்மறையாக எதையும் என் வாழ்வில் நான் பார்க்க மாட்டேன். காதலுக்கு என்னிடம் எப்போதும் முன்னுரிமை இருக்கும். சில விஷயங்களை இன்னும் நான் முடிக்க வேண்டியுள்ளது என்பதால் தான் இந்த மாற்றங்களும் சங்கடங்களும் நிகழ்ந்தன என்று கூட சொல்வேன்.