Matrimony OTT-Platforms Jobs Coupons Business

‘இன்டர்வியு’க்கு கிளம்பிட்டீங்களா??


இன்டர்வியு’க்கு கிளம்பிட்டீங்களா??






எந்த ஒரு பணி வாய்ப்புக்காக மனு போடும்போதும், நமது கல்வித் தகுதி, திறமை, குணாதிசயம் மற்றும் மனோபாவம் இவற்றிற்கேற்ற வேலைக்குத்தான் மனுப்போடுகிறோமா? என்பதுதான் முதல் கேள்வி.
ஒரு பொறியியல் பட்டதாரி, தனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதால் ஹோட்டல் ரிசெப்ஷனிஸ்ட் வேலைக்கு அப்ளிகேஷன் அனுப்பலாமா?
அனைவருக்கும் பொருந்துமா?
அதிகம் பேசாத ஒரு நபர் மெக்கானிக் அல்லது காசாளர் வேலைக்கு பொருந்துவார். நிறைய பயணம் பிடிக்கும், நிறைய பேச பிடிக்கும் என்றால் விற்பனை வேலைக்கு பொருந்துவார். எதற்கெடுத்தாலும் அலசி ஆராய்ந்து விளக்கம் தேடுபவர் விஞ்ஞானி அல்லது லேப் வேலைகளுக்கு பொருந்துவார்.
ரொம்ப நண்பர்கள் உண்டு. நிறைய பேசுவர் என்றால் வக்கீல், ஆசிரியர், மனநலஆலோசகர் வேலைக்கு பொருந்துவர். மற்றவரிடம் இருந்து வித்தியாசமாக இரவுப் பறவை, கற்பனை உள்ளவர் என்றால் ஆர்டிஸ்ட், விளம்பர நிபுணர், இசை அமைப்பாளர், பிலிம் துறைக்கு பொருந்துவார் என்று காலங்காலமாக பட்டியலிடுகின்றனர். இது அனைவருக்கும் பொருந்துமா?
நீங்கள் அறிவீர்களா?
இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானது, உங்களது திறமை என்ன? உங்களால் எந்த வேலையை சிறப்பாக செய்ய முடியும்? எது முடியவே முடியாது? என்பதை நீங்கள் முதலில் அறிய வேண்டும் என்பதே!
இதற்கு, ‘ரெஸ்யூமே’ எனும் சுயவிபரக்குறிப்பு தயாரித்தல், சுயபரிசோதனைக்கான முதல் முயற்சியாக அமைகிறது. உங்கள் தகுதிகளையும், திறமைகளையும் அதில் பட்டியலிடும் போது உண்மை என்ன என்பது உங்களுக்கே வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்!
உங்களுக்கு அனைத்தும் தெரியும் என்பது போன்ற பாவலா காட்ட நினைத்து பெரிய பட்டியலிட்டால், அநேகமாக சொதப்பலாகத் தான் இருக்கும் உங்கள் ‘இன்டர்வியு’ அனுபவம். நீங்கள் உண்மையாகவே உணர்ந்து உங்களது திறமைகளையும், தகுதிகளையும் வைத்து ‘ரெஸ்யூமே’ தயாரியுங்கள். அதனுடன் ஒரு இணைப்புக் கடிதத்தையும் சிறந்த முறையில், எழுதி மறக்காமல் கையெழுத்திடுங்கள்!
தயாராதல்
இப்போது உங்களுக்கு ‘இன்டர்வியு’ கடிதம் வந்துவிட்டது என்றால் அந்த நிறுவனம் குறித்த முழுவிவரத்தையும் தேடி, ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும். இதற்கு இணையதளங்கள் பெரிதும் உதவுகின்றன.
அந்த நிறுவனம் என்ன வியாபாரம் செய்கிறது, பொருட்கள் அல்லது சேவை விவரம், எத்தனை கிளைகள், யார்? எப்போது? தொடங்கிய நிறுவனம், எத்தனைபேர் வேலை பார்க்கிறார்கள், வெளிநாட்டில் கிளைகள் உள்ளனவா, நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை என்ற அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பது உங்கள் பொறுப்பு!
இரண்டாம் சந்திப்பில் முதல் அபிப்ராயத்தை ஏற்படுத்த முடியாது. எனவே முதல் சந்திப்பு நீடித்து நிற்கும் நல்லதொரு சந்திப்பாக இருக்க வேண்டும்!
கையில் கொண்டுபோகும் பைலில் அனைத்து சான்றிதழ்களையும் அழகாக வரிசைப்படி அடுக்கி வைத்தல் வேண்டும். சான்றிதழ்களின் நான்கு அல்லது ஐந்து நகல்கள், அண்மையில் எடுத்த புகைப்படம், வெள்ளைக் காகிதங்கள், நல்ல பேனா எல்லாம் கொண்டுபோக வேண்டும்.
முந்திய நாள் நல்ல தூக்கம், ஒவ்வாத உணவு எடுத்துக்கொள்ளாது இருத்தல், ‘இன்டர்வியு’க்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சற்றுமுன்பே சென்றடைய உதவும். உடன் நண்பர்கள், உறவினர்கள் யாரும் வேண்டாம். ‘இன்டர்வியு’ துவங்குவதற்கு முன்பு மொபைல்போனை ‘சுவிட்ச்ஆப்’ செய்தல் நல்லது.
செய்ய வேண்டியவை

இன்டெர்வியு அறையில் நுழையும்போது நிமிர்ந்தநடை, முகத்தில்பொலிவு, புன்னகை, உட்காருங்கள் என்ற பிறகு அமர்தல், அதற்கு முன்பு காலைவணக்கம் சொல்லுதல், கேட்டால் மட்டும் சான்றிதழ்களை காண்பித்தல், கண்களைப் பார்த்து பேசுதல் நன்மை பயக்கும்.
பேச்சில் நம்பிக்கை, சரியான அங்கபாஷை, சப்ஜெக்டில் போதிய அறிவு, பேசும்போது குறுக்கிடாது இருத்தல், கேட்ட கேள்வியை முதல் முறையே சரியாகப் புரிந்துகொண்டு சிறந்த விடையை அளித்தல், தெரியாது என்றால் தெரியாது என்று ஒப்புக்கொள்ளல், ரிலாக்ஸ் ஆக அணுகுதல், வார்த்தையை மென்று முழுங்காமல் பேசுதல் ஆகியவையும் நன்மை பயக்கும்.
செய்ய கூடாதவை

கால்களை ஆட்டுதல், நகத்தை கடித்தல், ஊம்கொட்டுதல், உடலை ஆட்டிபேசுதல், மேசையில் உள்ள பேப்பரில் கிறுக்குதல், மேசையில் உள்ளபொருட்களை எடுத்தல், அங்கே வைத்திருக்கும் தண்ணீரை குடித்தல், மூக்கை காதை சொரிதல் - இவை எதுவும் அறவே கூடாது.
  எந்த பதிலும் அவசரம் வேண்டாம். எல்லாம் தெரிந்தவர் போல நடந்துகொள்ளல் தவறு.
ஏழை, மிகவும் கஷ்டப்படுகிறேன் என்று பச்சாதாபபேச்சு வேண்டாம். பேசிக்கொண்டு இருக்கும்போது கடிகாரம் பார்க்ககூடாது, தரையை அல்லது சுவற்றைப் பார்த்து பேசவும் கூடாது. நன்றி என்று சொல்லிவிட்டு மெதுவாக புன்னகையோடு வெளியில் வரவும்.
கேள்விக்கு பதில்

கேட்ட கேள்வி புரியாதபோது இன்னொருமுறை சொல்லுமாறு கேட்கலாம். பத்து வினாடிகளுக்குள் விடை அளித்தால் சிறப்பு. எதுகேட்டாலும் தெரியாது தெரியாது என்றால் ரொம்ப ஆபத்து.
உங்களுக்கு ஏன் இந்த வேலை கொடுக்க வேண்டும், எப்போது வேலைக்கு சேருவீர்கள், சம்பளம் குறித்த பேச்சுவரும்போது கவனமாக, நம்பிக்கை தரும் வண்ணம்பேச வேண்டும். எழுத்துத்தேர்வு, குழுவிவாதம் இவை இருப்பின் அதற்கும் மனதளவில் தயார்நிலை நல்லது. சில நிறுவனங்கள் ஒப்பந்த படிவத்தில் கையெழுத்து கேட்கலாம். படித்துவிட்டு முடிவு செய்யவும். வெளியில் யாருடனும் உள்ளே நடந்த விஷயம் சொல்லவேண்டாம்.
இந்த விஷயங்களை கடைபிடித்தால் ‘அப்பாயின்மென்ட் ஆர்டர்’ உடன் வீட்டிற்கு செல்ல வாய்ப்புகள் அதிகம்... வாழ்த்துக்கள்!


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad