டிவி பார்த்தால் நோய்கள் இலவசம்
வாஷிங்டன் : நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 மணிநேரம் தொடர்ந்து டிவி பார்ப்பதால், புற்றுநோய், மாரடைப்பு, நீரிழிவு உள்ளிட்ட 8 நோய்கள் ஏற்பட்டு அமெரிக்காவில் ஆண்டுதோறும் பலர் மரணமடைந்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையம், இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நீரிழிவு, நிமோனியா, பார்கின்சன் நோய், கல்லீரல் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருக்கும்போதிலும், புற்றுநோய் மற்றும் இதயநோய்களின் மூலமே, அதிகளவில் மரணம் ஏற்படுகின்றன. டிவி பார்க்கும்நேரத்திற்கும், மரணத்தை ஏற்படுத்தும் நோய்களுக்கும் தொடர்பு உள்ளது. தினமும் 1 மணிநேரம் டிவி பார்ப்பவர்களுக்கும், மற்றும் 3 முதல் 4 மணிநேரங்கள் டிவி பார்ப்பவர்களை ஒப்பிடுகையில், அதிகநேரம் டிவி பார்ப்பவர்களுக்கு, இந்த நோயின் காரணமாக மரணம் ஏற்படுவது 15 சதவீத அதிக வாய்ப்பு உள்ளது. டிவி பார்க்கும்நேரத்தில், நமது உடல் உழைப்பு குறைவது மட்டுமல்லாது, அப்போது அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்ளுதல், மது அருந்துதல், புகைபிடித்தல் உள்ளிட்டவைகள் மேற்கொள்வதால், நமது உடல்நலன் மேலும் பாதிப்பிற்குள்ளாகிறது. நவநாகரீக பொருட்களை பயன்படுத்தும் போதும், நாம் உடல் உழைப்பை தவறாது மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு கண்டுபிடிப்பையும் அளவாக பயன்படுத்தினால், அனைவரும் நலமாக இருக்கலாம்....!