ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் மீண்டும் தோல்வியடைந்தது சென்னை அணி
புதுடில்லி: ஐ.எஸ்.எல்., தொடரில் இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது சென்னை அணி. நேற்று நடந்த லீக் போட்டியில் டில்லியிடம் 0–1 என்ற கோல்கணக்கில் வீழ்ந்தது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் தற்போது நடக்கிறது. இதில் நேற்று டில்லியில் நடந்த லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின.
துவக்கத்தில் இருந்தே டில்லி அணி வீரர்கள் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 6வது நிமிடத்தில் டில்லி வீரர் ரால்ட் மஞ்சள் அட்டை பெற்றார்.
போட்டியின் 8வது நிமிடத்தில் டில்லியின் மல்டர் அடித்த பந்தை, சென்னை வீரர் பிளாசி கையால் தடுத்தார். இதில் டில்லி அணிக்கு ‘பெனால்டி கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதை ஆண்டர்சன் சிகாவோ கோலாக மாற்றி அசத்தினார்.
சென்னை அணியின் எலானோ (26வது நிமிடம்), மென்டி (34வது நிமிடம்) அடித்த கோல் வாய்ப்புகள் வீணாக, முதல் பாதியில் டில்லி அணி 1–0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் சென்னை வீரர் பல்வந்த் சிங் (53வது நிமிடம்) தலையால் முட்டி கோல் அடிக்க முற்பட்டார். இது ‘கோல் போஸ்ட்டுக்கு வெளியே செல்ல, சென்னை ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
83வது நிமிடத்தில் சென்னையின் பெலிசாரி அடித்த பந்தும் இதே போல சரியான ‘பினிஷிங்’ இல்லாததால் வீணானது. தவிர, நட்சத்திர வீரர் எலானோ, 69 வது நிமிடத்தில் வெளியேறியது, முன்னணி வீரர் பிக்ரு, 80 வது நிமிடத்தில் களமிறங்கியது என, எல்லாம் சேர்ந்து கொள்ள, சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு மங்கியது.
முடிவில், சென்னை அணி 0–1 என்ற கோல்கணக்கில், வீழ்ந்தது. சென்னை அணி அடுத்த போட்டியில் வரும் 11ம் தேதி கோவாவை, அதன் சொந்தமண்ணில் சந்திக்கிறது.
கடந்த 2014ல் நடந்த முதல் ஐ.எஸ்.எல்., தொடரில் சென்னை அணி முதலில் பங்கேற்ற இரு லீக் போட்டிகளிலும் கோவா (2–1), கேரளா (2–1) அணிகளை வீழ்த்தி இருந்தது. இம்முறை கோல்கட்டா, டில்லி அணிகளுக்கு எதிரான முதல் இரு போட்டியிலும் தோற்றது ஏமாற்றம் தான்.
முதல் மற்றும் இரண்டாவது சீசன் ஐ.எஸ்.எல்., தொடரில் டில்லி அணிக்கு எதிராக இதுவரை 3 போட்டியில் களமிறங்கிய சென்னை அணி, ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. ஏற்கனவே தலா ஒரு தோல்வி, ‘டிரா’ செய்திருந்த சென்னை அணி, நேற்று இரண்டாவது முறையாக டில்லி அணியிடம் வீழ்ந்தது.
சென்னை வீரர்களுக்கு கால்பந்து எப்படி என மறந்து விட்டது போல. முதல் லீக் போட்டியில் மென்டி, தனது கையால் பந்தை தடுக்க, கோல்கட்டா அணிக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. நல்லவேளையாக இதை கோல்கீப்பர் அபவுலா தடுத்துவிட்டார்.
நேற்றும் மல்டர் அடித்த பந்தை சென்னை வீரர் பிளாசி, கையால் தடுக்க முயற்சிக்க, டில்லிக்கு ‘பெனால்டி’ கிடைத்தது. இதை சிகாவோ கோலாக மாற்ற, இதுவே சென்னை தோல்விக்கு காரணமாக அமைந்தது.