இந்திய அணியின் தோல்வி குறித்து விளக்கம் சொல்கிறார் தோனி
அஸ்வின் காயம் காரணமாக போட்டியின் பாதியில் இருந்து வெளியேறியது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கான்பூரில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. அஸ்வின் சிறப்பாக பந்து வீசி தென் ஆப்பிரிக்காவின் ஓட்டங்களை ஆரம்பத்தில் நன்றாக கட்டுப்படுத்தினார். அவர் 4.4 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டுடன், 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்நிலையில் காயம் காரணமாக அவர் பாதியில் வெளியேற, தென் ஆப்பிரிக்காவின் ஓட்டங்கள் மளமளவென்று உயர்ந்தது. டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 73 பந்தில் 104 ரன்கள் குவித்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்தியா, ரோஹித் சர்மா 150 ஓட்டங்களும், ரஹானே 60 ரன்கள் அடித்தும் கடைசி நேர சொதப்பலால் வெற்றி பெற முடியாமல் போனது. வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியைத் தழுவியது பற்றி இந்திய தலைவர் டோனி கூறுகையில், "நாங்கள் வெற்றியை நெருங்கி வந்தோம். கண்டிப்பாக இந்த போட்டியை நாங்கள் வென்றிருக்க வேண்டும். அருமையான வாய்ப்பு இருந்தும் நாங்கள் தவறாக சென்று விட்டோம். போட்டியை முடிக்கும் வாய்ப்பு எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. ரோஹித் சர்மா மற்றும் ரஹானே ஜோடி அருமையாக ஆடியது. இவர்களின் சிறப்பான ஆட்டம் தொடர வேண்டும். நாங்கள் சிறப்பாக பந்து வீசிக்கொண்டிருந்த நிலையில் அஸ்வினின் 6 ஓவர்களை இழந்துவிட்டோம். இது பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் ரெய்னா, பின்னிக்கு அதிக ஓவர்கள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நமது பந்து வீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.