வேதாளத்தை அடுத்து அஜித் விஷ்ணுவர்தன் இணைகிறார்கள்
அஜித் நடித்துள்ள வேதாளம் படத்தின் பணிகள் முடிந்து விட்டது. தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. அஜித் நடிக்கும் அடுத்த படம் என்ன என்பது மில்லியன் டாலர் கேள்வி. அந்த கேள்விக்கான பதில் இப்போது கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அஜித்தின் குட்புக்கில் இடம்பெற்றிருக்கும் இயக்குனர்களில் விஷ்ணுவர்த்தன் முக்கியமானர். அவர் இயக்கிய யட்சன் படம் தோல்வியால் கொஞ்சம் துவண்டு இருந்தவரை அழைத்த அஜித், "அடுத்து படம் சேர்ந்து பண்ணலாம் ப்ரோ. பெரிய பட்ஜெட் ஹிஸ்டாரிக்கல் படம், ஸ்கிரிப்ட் ரெடிபண்ணுங்க" என்று சொல்லியிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற சரித்திர படங்கள் அஜித்தை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரும் இதுவரை முழுமையான ஒரு சரித்திர படங்களில் நடித்ததில்லை. எனவே அப்படி ஒரு ஆசை வந்திருக்கிறது. தற்போது கால் தசை சிதைவுக்கு வெளிநாடு சென்று ஆபரேஷன் செய்து கொள்ளப்போகும் அஜித், மீண்டும் புதிய எனர்ஜியோடு வந்து சரித்திர படம் ஒன்றில் நடிக்க ஆர்வம் கொண்டிருக்கிறார். சமீபத்தில் பிரபல எழுத்தாளர் பாலகுமாரனை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில், இயக்குனர் விஷணுவர்த்தன் சந்தித்தார். அவரிடம் அஜித்தின் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். இந்த சந்திப்பில் பாலகுமாரன் எழுதிய உடையார் நாவலை படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள். தற்போது உடையார் நாவலை திரைக்கதையாக்கும் பணிகள் நடந்து வருகிறது. தஞ்சை பெரிய கோவிலை கட்ட ராஜராஜ சோழன் செய்த சாதனைகளை சொல்லும் நாவல் அது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது