விஸ்வரூபம் எடுத்த தோனி முதல் வெற்றியை பெற்றது இந்தியா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றிய தென்ஆப்பிரிக்க அணி, கான்பூரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தியது. இதனால் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தென்ஆப்பிரிக்கா 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான 2வது ஒரு நாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று (புதன்கிழமை) பகல்–இரவு ஆட்டமாக நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணித்தலைவர் தோனி , முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன் படி, ரோஹித் சர்மா, தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோஹித் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். தவான் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், 23 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ரஹானே நிதானமாக விளையாட, அவருடன் கைகோர்த்தார் கோஹ்லி. இந்நிலையில் கோஹ்லி (12) தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார் . பின்னர் அணித்தலைவர் தோனி களமிறங்கினார். அப்போது ரஹானே (51) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா டக்-அவுட் ஆகினார். இதனால் 104 ரன்களுக்கே இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அக்சர் (13), புவனேஷ்வர் குமார் (14) ஆகியோர் வரிசையாக ஆட்டமிழந்தனர். பொறுப்பாக ஆடிய அணித்தலைவர் தோனி அரைசதம் கடந்தார். ஹர்பஜன், தோனிக்கு ஆதரவாக விளையாடி வந்த நிலையில், 22 ரன்களில் ஆட்டமிழந்தார். உமேஷ் (4) நிலைக்கவில்லை. பின்னர் மொகித் சர்மா களமிறங்கினார். கடைசி வரை இந்திய அணியின் ரன்களை உயர்த்தப் போராடினார் தோனி . இதனால் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு ரன்கள் எடுத்தது. இந்திய அணித்தலைவர் தோனி ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் (7 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். மொகித் சர்மாவும் (0) இவருடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி சார்பில், ஸ்டெய்ன் 3, மொர்கல், தாகிர் தலா 2, ரபடா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 248 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. துவக்க ஆட்டகாரர்களாக அம்லாவும், டி காக்கும் இறங்கினார்கள். இருவரும் சிறப்பாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதனால் தோனி சுழற்பந்துவீச்சாளர்களை பந்து வீச அழைத்தார். இதனால் டி காக்கும், அம்லாவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனை அடுத்து வந்த டு பிளசிசும், டுமினியும் அணியை சரிவில் மீட்கப்போராடினார்கள். எனினும் அவர்கள் இருவரும் அஸ்கார் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனை அடுத்து கடந்த போட்டியில் சிறப்பாக ஆடி சதமடித்த வில்லியர்ஸ் களமிறங்கினார். இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவரும் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் தென் ஆப்பிரிக்க அணி 43.4 ஓவர்களில் 225 ரன்களே எடுத்தது. இதனையடுத்து இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்