சிம்பு படம் நின்றது ஏன்? புதியதகவல்கள்
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்த கான் படம் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார். அவர் தனுஷை வைத்து உடனடியாக ஒரு படத்தைத் தொடங்கவேண்டும் என்பதற்காகவே இந்தப்படத்தைத் தள்ளிவைத்தார் என்றும் சொல்லப்பட்டது. உண்மையில், செல்வராகவனுக்கும் சிம்புவுக்கும் நிறைய கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. படத்துக்காக எடையைக் குறைக்கவேண்டும் என்று செல்வராகவன் பலமுறை சொல்லியும் சிம்பு அதைச் செயல்படுத்தவில்லையாம். அதோடு எடையெல்லாம் குறைக்கமுடியாது என்றும் சொல்லிவிட்டாராம். அதனால் இந்தக்கதையை இப்படியே படமாக்கினால் நன்றாக இருக்காது என்பதால் கதையை மாற்றும்படி செல்வராகவனுக்கு அறிவுரை சொல்லப்பட்டதாகத் தெரிகிறது.அதற்கு அவர் தயாரில்லையாம். இங்கு நிலைமை இப்படியிருக்க இன்னொருபக்கம், வேறொரு தயாரிப்புநிறுவனத்துக்கு செல்வராகவன் கொடுக்கவேண்டிய தொகைக்கான காலக்கெடுவும் நெருங்கிக்கொண்டிருக்கிறதாம். இந்தப்படத்தை முடித்து அதன்மூலம் வருகிற தொகையில் அந்தக்கடனை அடைப்பது நடக்காத காரியம் என்கிற நிலை ஏற்பட்டுவிட்டதாம். அதனால், இந்தப்படத்தை விட்டுவிட்டு உடனடியாக வேறு படத்தைத் தொடங்கலாம் என்று செல்வராகவன் முடிவெடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த யோசனையை அண்ணனுக்குச் சொன்னது தம்பி தனுஷ்தான் என்கிறார்கள்.