மும்பையில் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டுபிளசி காலில் பிடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட போது இந்திய அணித்தலைவர் டோனி ஓடி வந்து உதவினார். தோனியின் இந்த செயல் இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் வீசிய 42வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட டுபிளசி, அந்த பந்தை சிக்சருக்கு விரட்டிய போது அவரது வலது காலில் ஏற்பட்ட பிடிப்பால் மைதானத்தில் அப்படியே சரிந்தார். அப்போது அருகில் கீப்பிங் செய்து கொண்டிருந்த இந்திய அணியின் தலைவர் டோனி ஓடி வந்து அவரது பாதங்களை மடக்கி பிடித்து வலியைப் போக்க முயற்சி செய்தார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் சக வீரராக இருந்தவர் டுபிளசி என்பது குறிப்பிடத்தக்கது.