வேலைக்கார சிறுமியை தாக்கிய வழக்கு: வங்கதேச வீரர் ஷகாதத் ஹொசைன் சிறையில் அடைப்பு
வேலைக்கார சிறுமியை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த வங்கதேச வீரர் ஷகாதத் ஹொசைன் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். வங்கதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹொசைன் (29). இவர் தனது மனைவியுடன் சேர்ந்து தனது வீட்டில் வேலைப் பார்த்து வந்த 11 சிறுமியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஷகாதத் மற்றும் அவருடைய மனைவி கைது செய்யப்படலாம் என்ற நிலையில், இருவரும் தலைமறைவாகினர். இதைத் தொடர்ந்து பொலிசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஷகாதத்தை சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில் தனது தாயார் வீட்டில் மறைந்திருந்த ஷகாதத்தின் மனைவியை பொலிசார் நேற்று கைது செய்தனர். இதனையடுத்து ஷகாதத் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும், முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால், நீதிபதி முன்ஜாமீன் கொடுக்க மறுத்ததால் ஷகாதத் சிறையில் அடைக்கப்பட்டார்.