திருட்டு செல்போன்கள் ஆன் லைன் மூலம் விற்பனை:
திருட்டு செல்போன்கள் ஆன் லைன் மூலம் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, டெல்லியில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய செல்போன்கள் அண்மையில் கொள்ளையடிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இது குறித்து செல்போன் வணிகர்கள் அளித்த புகாரினைத் தொடர்ந்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது டெல்லியில் உள்ள 22 பேர், கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிஃப்கார்ட்டில் இருந்து இந்த செல்போன்களை வாங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அதற்கான ஆவணங்களையும் அவர்கள் காவல்துறையினரிடம் அளித்தாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நூதன திருட்டு வழக்கில் 6 பேரை டெல்லி போலீசார் கைதும் செய்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்கள் பிளிஃப்கார்ட் நிறுவனம் மூலம் எப்படி விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு பிளிஃப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்கள், பிளிஃப்கார்ட் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்பட்டிருப்பது ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.