தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி ரோகித் சதம் வீண்
இந்திய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா அணி மூன்று டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் எடுத்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா அதிரடியாக விளையாடி சதம் கடந்து 106 ஓட்டங்கள் குவித்தார். வீராட் கோஹ்லி 43 ஓட்டங்களும், சுரேஷ் ரெய்னா 14 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டமிழக்காமல் டோனி 20 ஓட்டங்கள் எடுத்திருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் கைல் அப்பாட் 2 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 200 ஓட்டங்கள் இலக்குடன் தென் ஆப்ரிக்க அணி துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரராக களமிறங்கிய ஹாசிம் ஆம்லா 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதேபோல் அதிரடியாக விளையாடிய டிவில்லியர்ஸ் 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டூ பிளசிசும் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த டுமினி மற்றும் ஃபர்கான் பிஹார்டின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்து சென்றனர் இறுதியில் 1 ஓவருக்கு 10 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 3 வது பந்தை அருமையாக சிக்ஸருக்கு விரட்டிய டுமினி அடுத்த பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். டுமினி 68 ஓட்டங்களுடனும், பிஹார்டின் 32 ஓட்டங்களுடனும் இறுதி வரை களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் அரவிந்த் தலா ஒரு விக்கெட்கள் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள்& இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்று முன்னிலையில் இருக்கிறது.