ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி: மேற்கிந்திய தீவுகள் அணி வெளியேற்றம்.. தகுதி பெற்றது வங்கதேசம்
‘மினி உலகக்கோப்பை ’ என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடும் அணிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் 2017ம் ஆண்டு யூன் மாதம் 1ம் திகதி முதல் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் விளையாட ஐ.சி.சி. தரவரிசை அடிப்படையில் முதல் எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் தகுதி பெறும். அதன் படி வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் முதல் 8 இடங்களில் இல்லை. இதனால் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் தகுதியை இழந்துள்ளது. இந்த அணி 9வது இடத்தில் உள்ளது. அதே சமயம் சமீபத்தில் சிறப்பாக ஆடி வரும் வங்கதேச அணி 7வது இடத்தை பிடித்து சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் 2006க்கு பிறகு முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது வங்கதேசம். மேலும், பாகிஸ்தான் அணி 8வது மற்றும் கடைசி இடத்தை பிடித்து தகுதி பெற்றது. தவிர, நடப்பு சாம்பியன் இந்தியா, உலகசாம்பியன் ஆஸ்திரேலியா , தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.