ஐ.எஸ்.எல் கால்பந்தாட்ட போட்டி மும்பையை வென்றது புனே
புனே: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் மும்பை அணி, புனேயிடம் 1–3 என்ற கோல்கணக்கில் வீழ்ந்தது. ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் தற்போது நடக்கிறது. புனேயில் நேற்று நடந்த லீக் போட்டியில், ‘பாலிவுட்’ நடிகர் ஹிருத்திக் ரோஷன் சக உரிமையாளராக உள்ள புனே சிட்டி அணி, மற்றொரு ‘பாலிவுட்’ நடிகர் ரன்பிர் கபூர் சக உரிமையாளராக இருக்கும் மும்பை சிட்டி அணியை சந்தித்தது. போட்டியின் 12வது நிமிடத்தில் புனே வீரர் சான்லி ஒரு கோல் அடித்தார். 34வது நிமிடம் மும்பை வீரர் பிக்குயானே பதில் கோல் அடிக்க, முதல் பாதி 1–1 என சமன் ஆனது. இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்ற புனே அணிக்கு, சான்லி (56வது நிமிடம்) மற்றொரு கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இந்த அணிக்கு 68வது நிமிடம், குராங் ஒரு கோல் அடிக்க 3–1 என, அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. சுனில் செத்ரி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாத மும்பை அணி தொடர்ந்து தடுமாறியது. முடிவில் 3–1 என்ற கோல் கணக்கில் புனே அணி வெற்றி பெற்றது.