மீண்டும் வருகிறது சென்னை அணி
பிரிமியர் தொடரில் தடை செய்யப்பட்ட சென்னை அணிக்குப் பதில் மீண்டும் புதிய சென்னை அணி பங்கேற்கவுள்ளது. வழக்கம் போல தோனி கேப்டனாக இருப்பார் எனத் தெரிகிறது. ஆறாவது பிரிமியர் தொடரில் ஏற்பட்ட சூதாட்ட பிரச்னை காரணமாக, சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன. இந்த அணிகள் 2018ல் தான் மீண்டும் தொடரில் பங்கேற்கும். இதனால் 2016, 17 தொடருக்கு மட்டும் புதியதாக இரு அணிகளை சேர்க்க முயற்சிகள் நடக்கின்றன. இதன் படி, சென்னை மற்றும் ஜெய்ப்பூரை அடிப்படையாக கொண்டு இரு அணிகள் உருவாகும் எனத் தெரிகிறது. இதையடுத்து வரும் 2016 தொடரில் புதிய சென்னை அணி பங்கேற்பது உறுதியாகிறது. தவிர, இந்த அணிக்கு வழக்கம் போல தோனியை மீண்டும் கேப்டனாக்க முயற்சிகள் நடக்கின்றன. இதனால் தோனி சென்னை அணியில் தொடர்ந்து நீடிக்கலாம். இதுகுறித்து பிரிமியர் தொடர் அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒருவேளை எல்லாம் சரியாக நடக்கும் பட்சத்தில் வரும் பிரிமியர் தொடரில் மீண்டும் தோனி தலைமையில் புதிய சென்னை அணி பங்கேற்கலாம்.