நடிகர் விஜய் வேதனை!!! நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லையா?
நடிகர் விஜய் வேதனை!!! நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி தாக்கல்
செய்யவில்லையா?
நான்கைந்து ஆண்டுகளாக நான்
வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை என்று
நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய், நடிகைகள்
நயன்தாரா, சமந்தா, திரைப்படத்
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, புலி படத்தின் இயக்குநர்
சிம்புதேவன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 35
இடங்களில் வருமான வரித் துறையினர் சென்ற வாரம் சோதனை செய்தார்கள்.
இதனால் புலி படம் சரியான நேரத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. விஜய் 5
வருடங்களாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றும் செய்திகள்
வெளிவந்தன. இதற்கு நடிகர் விஜய் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
வருமான வரித்துறையினர் கலை
உலகைச் சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள்,
தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில்
சோதனையிடுவதும், தணிக்கை செய்வதும் இயல்பான ஒன்று. கடந்த
வாரம் என்னுடைய இல்லத்திலும், அலுவலகத்திலும் வருமான
வரித்துறையினர் நான் வருமான வரி ஏய்ப்பு ஏதும் செய்துள்ளேனா என்று
சோதனையிட்டார்கள்.
நானும், எனது
குடும்பத்தாரும், எனது அலுவலர்களும் வருமான வரித்துறை
அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். ஆனால் சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி தாக்கல்
செய்யவில்லை என்று உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியுள்ளதை அறிந்து மிகுந்த
மனவேதனை அடைந்தேன்.
மேற்படி செய்தியில்
சிறிதளவும் உண்மையில்லை. நான் சட்டத்தை மதித்து நடப்பவன். என்றும் சட்டத்துக்கு
மரியாதை கொடுப்பவன். நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய தொழில் மற்றும் வருமானம்
சம்பந்தப்பட்ட கணக்கினைக் குறித்த நேரத்தில் வருமான வரி அலுவலகத்தில் தாக்கல்
செய்து, அதற்குரிய வருமான வரியையும், சொத்து வரியையும்,
தொழில் வரியையும் முறையாக செலுத்தியுள்ளேன் என்பதுதான் நிதர்சனமான
உண்மையாகும்.
மேலும் நான் எப்பொழுதும்
வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். எனவே உண்மைக்கு புறம்பான
தேவையற்ற வீண் கருத்துகளை செய்தித்தாள்களிலோ, ஊடகங்களிலோ வெளியிட்டு என் மனதைப் புண்படுத்த
வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தன் அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.