தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சவாலாக இருக்கும்: அஸ்வின்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் விளையாட இருப்பதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் காயமடைந்த அஸ்வின் அடுத்த 4 போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்து விட்டது. இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அஸ்வின் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அஸ்வின், "நான் காயத்தில் இருந்து மீண்டு வருகிறேன். டெஸ்ட் தொடருக்கு முன்பு முழு உடல் தகுதியை எட்டுவேன் என்று நினைக்கிறேன். இருப்பினும் பயிற்சியில் ஈடுபடும் போது தான் உடல் தகுதி குறித்து உறுதியாக தெரியும். தென் ஆப்பிரிக்கா வலுவான அணியாகும். அந்த அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதிக அளவில் இடம் பிடித்துள்ளனர். அதே சமயம் நமது அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இருப்பினும் ஒருநாள் தொடரில் கடும் போட்டி நிலவியதை மறந்து விட முடியாது. ஐபிஎல் போட்டியில் கிடைத்த அனுபவங்கள் தான் தென் ஆப்பிரிக்க அணியினர் நமது ஆடுகளத்தை கணித்து விளையாட உதவிகரமாக இருந்து இருக்கும். மேலும், நமது அணியில் பந்து வீச்சு பலவீனமாக இருக்கிறது என்று சொல்வதை ஏற்க முடியாது. நமது அணியில் பந்து வீச்சு, பேட்டிங் ஆகியவை சிறப்பாக தான் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இருப்பினும் நமது அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடும்” என்று தெரிவித்துள்ளார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் எதிர்வரும் 5ம் திகதி மொகாலியில் தொடங்குகிறது.