விஸ்வரூபம் எடுக்கும் மோதல் விவகாரம்: கங்குலியை இனவெறியுடன் வசைபாடிய கம்பீர்?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலியை, கம்பீர் இனவெறியுடன் திட்டியதாக பெங்கால் அணித்தலைவர் மனோஜ் திவாரி குற்றம் சாடியுள்ளார். டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த டெல்லி– பெங்கால் அணிகள் மோதிய ரஞ்சிக் கிண்ணப் போட்டி நேற்று டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் பெங்கால் அணித்தலைவர் மனோஜ் திவாரியும், டெல்லி அணித்தலைவர் கவுதம் கம்பீரும் மைதானத்தில் மோதலில் ஈடுபட்டனர். மேலும், கோபத்தில் திவாரியை அடிப்பது போல் சீறினார் கம்பீர். சமாதானப்படுத்த முயன்ற நடுவர் ஸ்ரீநாத்தையும் கம்பீர் கீழே தள்ளியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர் வால்மிக் புச், கம்பீருக்கு 70 சதவீதமும், திவாரிக்கு 40 சதவீதமும் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதமாக விதித்தார். நடுவரையும் தாக்கிய கம்பீருக்கு ஒரு சில ஆட்டங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அபராதத்துடன் தப்பினார். மனோஜ் திவாரி குற்றச்சாட்டு:- இதற்கிடையே சம்பவம் குறித்து பேசிய பெங்கால் அணித்தலைவர் மனோஜ் திவாரி, "இந்த பிரச்சனையில் கம்பீர், கங்குலி பற்றியும் பெங்காலி மக்கள் பற்றியும் இனவெறியுடன் திட்டினார். இது தொடர்பாக நான் கங்குலியுடன் நான் பேசினேன். இதைக் கேட்டு அவர் அதிர்ச்சிக்குள்ளானார். கங்குலிக்கு எதிரான இத்தகைய கருத்துகளை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என்று கூறியுள்ளார். கம்பீர் விளக்கம்:- இதைத் தொடர்ந்து மனோஜ் திவாரியின் குற்றச்சாட்டு தொடர்பாக கம்பீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கங்குலி எனக்கு பிடித்த அற்புதமான கிரிக்கெட் வீரர். அவரது தலைமையின் கீழ் நான் விளையாடி இருக்கிறேன். இந்த நிலையில் நான் அவரை பற்றியும் பெங்காலி மக்கள் பற்றியும் இனவெறியுடன் பேசினேன் என்று சொல்வதை திவாரி நிறுத்த வேண்டும். இது போன்ற உணர்ச்சிகளை தூண்டும் விதமான கட்டுக்கதைகளை அவிழ்த்து விட வேண்டாம். நான் இந்தியனாக அனைத்து சமூக மக்களையும் மதிப்பவன். நான் கொல்கத்தா அணியை வழிநடத்தி வருகிறேன். பெங்காலி எனது 2வது வீடு. அந்த ரசிகர்களின் ஆசியுடனே நான் கொல்கத்தா அணியின் தலைவராக 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். அவர்களுக்கு நான் அதிகமாக கடைமைப்பட்டுள்ளேன் "என்று குறிப்பிட்டுள்ளார்.