ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் நேற்றைய ஆட்டம் டிராவில் முடிந்தது
படோர்டா: கோல்கட்டா, கோவா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., தொடரின் லீக் போட்டி 1–1 என்ற கோல்கணக்கில் ‘டிரா’ ஆனது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் தற்போது நடக்கிறது. இதில் கோவாவில் உள்ள படோர்டாவில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா அணி, கோவாவை சந்தித்தது. போட்டியின் 13வது நிமிடத்தில் லாரா ஜாவி கொடுத்த பந்தை பெற்ற கோல்கட்டாவின் அராட்டா இஜுமி, அந்தரத்தில் இருந்தபடியே பந்தை அடிக்க, அது அருமையான கோலாக மாறியது. இதை சமன் செய்ய போராடிய கோவாவின் முயற்சிகள் வீணாக, முதல் பாதியில் கோல்கட்டா அணி 1–0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் கோல்கட்டா வீரர்கள் சிறப்பாக ஆடிய போதும், அவ்வப்போது முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தினர். முதல் ‘ரெட் கார்டு’: போட்டியின் 62வது நிமிடத்தில் கோல்கட்டா வீரர் பல்ஜித் சைனி, கோவா வீரர் கிரிகரியை தலையால் முட்ட, ‘ரெட் கார்டு’ பெற்றார். இத்தொடரில் ஒரு வீரருக்கு ‘ரெட் கார்டு’ கிடைத்தது இது தான் முதன் முறை. இதையடுத்து கோல்கட்டா அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. பந்து பெரும்பாலும் கோவா வீரர்கள் வசம் சென்றது. இதை சரியாக பயன்படுத்திய கோவா வீரர் கீனன் அல்மெய்டா, 81வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 1–1 என, சமன் ஆனது. அடுத்து முன்னிலை பெற இரு அணி வீரர்கள் எடுத்த முயற்சி எதுவும் பலிக்கவில்லை. முடிவில் 1–1 என்ற கோல் கணக்கில் போட்டி ‘டிரா’ ஆனது