திருமண நாளில் புது மாப்பிள்ளைக்கு வந்த சோதனை!
இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் - கீதா பஸ்ரா திருமணம் நேற்று ஜலந்தரில் நடந்தது. சச்சின், ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி உள்ளிட்ட வி.வி.ஐ.பிக்கள் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.இதனால் திருமணம் நடக்கும் இடத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இது தொடர்பான தனியார் நிறுவனம் ஒன்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. நேற்று திருமணம் தொடர்பான சடங்கு நிகழ்வுகளை வீட்டுக்கு வெளியே நின்று தனியார் சேனல்களின் வீடியோ கேமராமேன்கள் பதிவு செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த பாதுகாப்பு படையினர், அவர்களிடம் இருந்து கேமராக்களை பிடுங்கி கொண்டனர்.அதோடு அவர்களை அந்த இடத்தை விட்டும் அப்புறப்படுத்தினர். இதனால் கோபமடைந்த செய்தியாளர்கள், திருமணம் நடந்த பங்களா முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வெளியே வந்த ஹர்பஜன்சிங், செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக பாதுகாப்பு படையினர் 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.