Matrimony OTT-Platforms Jobs Coupons Business

வசூலில் பாகுபலியை முந்திய புலி










          ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடந்த வியாழக்கிழமை ( அக்டோபர் 1 ) அன்று விஜய் நடிப்பில் வெளியான புலி படம் குறித்த விமர்சனங்கள் அப்படத்தின் வசூலை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், உண்மை நிலவரம் என்ன என்பதை கடந்த வார பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் படம் பிடிக்கிறது.  வழக்கமாக விஜயின் படத்திற்கு ஓப்பனிங் நன்றாகவே இருக்கும். முதல் 3 நாட்கள் கலெக்சனே தியேட்டர் உரிமையாளர்களை ஓரளவு தெம்பாக்குவதோடு, படத்தின் பல்ஸையும் வெளிப்படுத்திவிடும்.  இந்நிலையில் விஜயின் முந்தைய எந்த படத்திற்கும் இல்லாத வகையில், புலி படத்தை கடுமையாக கிண்டல், கேலி செய்து சமூக வலைத்தளங்களில் வெளியான விமர்சனங்கள், ஏற்கனவே வருமான வரித்துறையினரின் ரெய்டால் நொந்து போயிருந்த புலிபடக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்தது.
ஒருபக்கம் அஜித் ரசிகர்கள் களமிறங்கி மீம்ஸ்களாக போட்டு தாக்க,  வழக்கமாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்வுட்டர் மற்றும் பிளாக்குகளில் பதிவிடப்பட்ட விமர்சனங்களிலும் பெரும்பாலானவை எதிராகவே அமைந்தன. அதே சமயம் புலி படத்திற்கு எதிரான விமர்சனங்கள் வரம்பு மீறி செல்வதாகவும்,  100 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டு எடுக்கப்படும் படங்களை இப்படி கணினியின் முன் அமர்ந்துகொண்டு, சினிமா குறித்து போகிறபோக்கில் விமர்சிப்பது சரியா என்ற வாதமும் இன்னொரு தரப்பினரால் முன்வைக்கப்பட்டது.
ஆனால், " 200, 300 என பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் ரசிகன் என்ற முறையில் பார்க்கும் படத்தை நாங்கள் விமர்சிக்கமால் வேறு யார் விமர்சிப்பார்கள்?  அதுவே படம் நன்றாக இருந்தால், படத்திற்கு வரவேற்பு தெரிவித்தும் விமர்சனம் செய்யவில்லையா? இந்த விமர்சனங்கள், சுமாராக போய்க்கொண்டிருந்த படத்திற்கும் வசூல் மழையை கொட்டவைக்கவில்லையா?
அதுமட்டுமல்லாது எங்களது விமர்சனங்களால்தான் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது என்று தயாரிப்பாளரோ அல்லது இயக்குநரோ கூறுவதில் அர்த்தம் இல்லை. நன்றாக இருக்கிறது என்று நாங்கள் பாராட்டிய படங்களும் வசூல் ரீதியில் தோல்வி அடைந்துள்ளன. இதற்கு என்ன சொல்வார்கள்? இணையம் மற்றும் மொபைல் போன் போன்றவற்றில் பகிரப்படும் விமர்சனங்கள் நகர்ப்புறங்களில் உள்ள மிகக்குறைந்த சதவீதத்தினரிடத்தில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. படம் நன்றாக இருந்தால் மட்டுமே பெரும்பான்மையான ரசிகர்கள் வருகிறார்கள். எதிர்மறையான விமர்சனங்கள் சென்று சேருகிற வேகத்திற்கு, பாராட்டப்படும் விமர்சனங்கள் சென்று சேருவதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்" என்கிறார்கள் வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் விமர்சகர்கள்.
இந்த அக்கப்போர்கள் இவ்வாறு இருக்க புலி படத்தின் உண்மையான வசூல் நிலவரம்தான் என்ன என்று ஃபாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்டை பார்த்தால், ஓப்பனிங் வசூல் அத்தனை மோசமில்லை என்றே தோன்றுகிறது.  படம் ரிலீஸாகி நேற்று வரை ( 4.10.15) 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், ஏறக்குறைய 32 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கேளிக்கை வரியை கழித்தால் வசூல் தொகை ரூ. 27 கோடி வரும். இதில் சென்னையில் மட்டும் முதல் 4 நாட்களில் 2.85 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாம். அதாவது சென்னையில் மொத்தம் 465 காட்சிகள் திரையிடப்பட்டு, இவற்றில் 90 சதவீத்திற்கும் அதிகமான இருக்கைகள் நிரம்பி உள்ளன.  இது பாகுபலி படத்தின் வசூலை விட அதிகம் என பாக்ஸ் ஆபீஸ் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 'பாகுபலி'-யின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் சென்னையில் 363 காட்சிகள் திரையிடப்பட்டு, 1.66 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. அதே சமயம் புலி 2.84 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்த அளவுக்கான வசூலுக்கு காந்தி ஜெயந்தி விடுமுறையும், போட்டிக்கு வேறு எந்த படங்களும் இல்லாததும்தான் காரணம் என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
மேலும் முந்தைய வாரங்களில் வெளியான படங்களுடன் ஒப்பிடுகையிலும் புலி வசூல் நன்றாகவே இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் சொல்கின்றன. நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா கடந்த வாரத்தில் 90 காட்சிகள் திரையிடப்பட்டு ( சென்னையில்தான்) 19.38 லட்சத்தை மட்டும் வசூலித்துள்ளன. இப்படம் வெளியாகி மூன்று வார முடிவில் கிடைத்த மொத்த வசூல் 2.68 கோடி.
அதேப்போன்று தனி ஒருவன் 54 காட்சிகள் திரையிடல்களுடன் 9.12 லட்சத்தை வசூலித்துள்ளது. ஜெயம் ரவி, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாகி உள்ள இப்படம், 6 வாரங்கள் இறுதியில் 6.33 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இந்நிலையில் விஜய்-க்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்து மற்றும்  'குழந்தைகளுடன் சென்று பார்க்கலாம்' என்று எழுந்துள்ள பாசிட்டிவான விமர்சனங்கள் போன்றவை மேற்கூறிய வசூலை  அடுத்த வாரத்தில் முறியடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் 100 கோடிக்கும் அதிகமான செலவில் புலி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், போட்ட பணத்தை எடுக்கவும், லாபம் ஈட்டவும் அடுத்து வரும் ஓரிரு வாரங்கள் புலி தயாரிப்பாளரின் கல்லா பெட்டியை தீர்மானிக்கும் நாட்களாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad