அதிரடியில் வியக்க வைத்த டிவில்லியர்ஸ்: தென்ஆப்பிரிக்க அணிக்கு சச்சின் பாராட்டு
தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்சின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் வியக்க வைக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். டிவில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதன்முறையாய இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சச்சின் கூறுகையில், "இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பேட்டிங் செய்தது . அந்த அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக், டி வில்லியர்ஸ், டுபிளசி ஆகியோர் சிறப்பாக ஆடினர். அதிலும் டி வில்லியர்ஸ் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. தற்போது அவருடைய ஆட்டம் உச்சக்கட்டத்தில் உள்ளது. அவர் முதல் 20 பந்துகளை சந்திக்கும் வரை தான் ஒரே இடத்தில் நின்று ஆடுவார். அவரது ஆட்டம் நம்பமுடியாத வகையில் என்னை வியக்க வைக்கிறது. மேலும், தற்போது ஒருநாள் போட்டிகளில் விதிகள் மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தில் அதிக மாற்றத்தை காண முடிகிறது. கடந்த 3 வருடங்களில் ஆஸ்திரேலியா மைதானங்களில் கூட பிற அணிகள் 320 ரன்கள் எடுக்கின்றன. பேட்டிங் வீரர்களும் வித்தியாசமான ஷாட்களால் ரன்களை குவிக்கின்றனர். தற்போதுள்ள இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. மற்ற வீரர்கள் என்ன கூறியுள்ளனர் என்பது குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது" என்று தெரிவித்துள்ளார்.