நீங்கள் தவறு செய்ய வேண்டும் என்று பலர் வாளுடன் காத்திருக்கின்றனர்: தோனி சொல்கிறார்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி மிகச் சிறந்த வெற்றியாக அமைந்தது என்று இந்திய அணித்தலைவர் தோனி கூறியுள்ளார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதிய 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 246 ரன்கள் குவித்தது. இந்திய அணித்தலைவர் தோனி சிறப்பாக விளையாடி 92 ரன்கள் எடுத்தார். பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா 225 ரன்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை டோனி பெற்றார். இந்த டென்ஷன் வெற்றி பற்றி தோனி கூறுகையில் “ நீங்கள் எப்போது தவறு செய்யப் போகிறீர்கள் என்று பலர் தங்கள் வாளுடன் காத்திருக்கின்றனர். அந்த தருணம் அவர்களுக்கு கிடைக்கும் போது கேலி செய்கிறார்கள். இந்தப் போட்டி சிறப்பான போட்டியாக அமைந்தது. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை. பிறகு வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசி குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்தார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். இந்தியாவிற்காக விளையாடும் போது எப்போதுமே அழுத்தம் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறத்தான் விரும்புகிறோம். ஆனால் எப்போதும் அப்படி நடப்பது இல்லை. மொத்தத்தில் கூறவிரும்பினால் இந்தப் போட்டியில் நாங்கள் எங்கள் முழு திறமையை வெளிப்படுத்தவில்லை. 80 சதவீதம் கூட வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்” என்று கூறியுள்ளார்.