ஐ.எஸ்.எல்.கால்பந்தாட்ட போட்டி நேற்றைய ஆட்டத்தில் பூனே அணி வெற்றி பெற்றது
புனே: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட் அணியின் ரால்தே ‘சேம்சைடு கோல்’ அடிக்க, புனே அணி 1–0 என இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, புனேயில் நடந்த 7வது லீக் போட்டியில் ‘பாலிவுட்’ நடிகர் ஹிருத்திக் ரோஷன் சக உரிமையாளராக உள்ள புனே சிட்டி அணி, மற்றொரு ‘பாலிவுட்’ நடிகர் ஜான் ஆபிரஹாம் சக உரிமையாளராக இருக்கும் வடகிழக்கு யுனைடெட் அணியுடன் மோதியது. துவக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் வடகிழக்கு யுனைடெட் அணியின் சிலாஸ் (போர்ச்சுகல்) மஞ்சள் அட்டை பெற்றார். இதேபோல 16வது நிமிடத்தில் புனே வீரர் மணிஷ் மைதானிக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. போட்டியின் 20வது நிமிடத்தில் வடகிழக்கு யுனைடெட் அணியின் நிகோலஸ் வெலஸ் (அர்ஜென்டினா) கோலடிக்க கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். முதல் பாதியில் 51 சதவீதம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்த புனே அணி வீரர்களும் கோலடிக்க தவறினர். இதனையடுத்து முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 70வது நிமிடத்தில் புனே அணியின் டுன்கே சான்லி (துருக்கி) தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார். ஆனால் அது ‘ஆப்–சைடு’ என ‘ரெப்ரி’ தெரிவிக்க சான்லி உட்பட மைதானத்தில் இருந்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். பின், 73வது நிமிடத்தில் புனே அணிக்கு கிடைத்த ‘கார்னர் கிக்’ வாய்ப்பில் பனாய் லால்ரெம்புயா அடித்த பந்தை வடகிழக்கு யுனைடெட் அணியின் ஜோமிங்லியானா ரால்தே தலையால் முட்டி வெளியே தள்ள முயன்றார். ஆனால் பந்து கோல் வலைக்குள் சென்று ‘சேம் சைடு கோல்’ ஆனது. தொடர்ந்து போராடிய இரு அணி வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இரண்டாவது வெற்றி: ஆட்டநேர முடிவில் புனே அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் புனே அணி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன், புனேயில் நடந்த போட்டியில் மும்பை அணியை தோற்கடித்தது. இதுவரை விளையாடிய 2 லீக் போட்டியிலும் வெற்றி பெற்ற புனே அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. அடுத்த இரண்டு இடங்களில் தலா 4 புள்ளிகளுடன் கோவா, கோல்கட்டா அணிகள் உள்ளன.