சிம்புவை எதிர்த்துப் போட்டியிடும் கருணாஸ்! நடிகர்சங்கத்தேர்தல் போட்டியாளர்கள் விவரம்
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகின்ற 18ம் தேதி நடக்கிறது. இரண்டு அணிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. மேலும் பல மூத்த நடிக, நடிகைகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். நடிக நடிகைகள் பலர், நாங்கள் யார் பக்கம் நிற்க? என்று புலம்பும் சூழ்நிலை நிலவி வருகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1ம் தேதி தொடங்கி 3ம் தேதி வரை நடைபெற்றது. நேற்று வேட்பு மனுக்களுக்கான பரிசீலனை நடந்தது. மொத்தமாக 71 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவற்றில் 68 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 3 பேரின் வேட்பு மனுக்கள் சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
சரத்குமார் அணியில் தலைவர் பதவிக்கு அவரும், அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதாரவி, துணைத்தலைவர்கள் பதவிக்குப் போட்டியிடும் விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்குப் போட்டியிடும் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. சரத்குமார் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடும் ராம்கி, டி.பி.கஜேந்திரன், அசோக், நளினி, கே.என்.காளை, ஜெயமணி, நிரோஷா, எஸ்.என்.பார்வதி, கே.ராஜன், கே.ஆர்.செல்வராஜ், ஜாக்குவார் தங்கம், சிசர் மனோகர், மோகன்ராமன், பசி சத்யா உள்பட 24 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டன. விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால், துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிடும் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் கார்த்தி ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடும் ராஜேஷ், பிரசன்னா, ஜூனியர் பாலையா, கோவை சரளா, ரமணா, நந்தா, உதயா, சங்கீதா, பூச்சி முருகன், குட்டி பத்மினி, ஸ்ரீமன் உள்பட 24 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டன.
போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வரும் 8ம் தேதி வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சரத் அணியில் துணைத்தலைவர் பொறுப்புக்கு சிம்பு போட்டியிடுவதாலேயே விஷால் அணியில் அந்தப்பொறுப்பில், நான் போட்டியிடுகிறேன் என்று கருணாஸ் முன்வந்து போட்டியிடுவதாகவும் சொல்லப்படுகிறது.